அண்ணாவையும், பெரியாரையும் பாஜவிடம் அடமானம் வைத்தவர்கள் தமிழ்நாட்டையும் அடகு வைத்துவிடுவார்கள்: அதிமுக மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

திருப்பத்தூர்: பெரியாரையும், அண்ணாவையும் பாஜவிடம் அடமானம் வைத்தவர்கள், தமிழ்நாட்டையும் அடகு வைத்து விடுவார்கள் என்று அதிமுக மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து உள்ளார். 

தமிழ்நாட்டின் நலன் மேல் அக்கறை இல்லாத கடந்தகால ஆட்சியாளர்களால் சீரழிந்த தமிழ்நாட்டின் வளர்ச்சியை நம்முடைய திராவிட மாடல் அரசு, மீட்டெடுத்து, வரலாறு காணாத வளர்ச்சிக்கு நாம் கொண்டு சென்றிருக்கிறோம். தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனை செய்யும் ஒன்றிய அரசால் கூட, நம்முடைய வளர்ச்சியை மறைக்க முடியவில்லை.

இது தமிழ்நாடு, தந்தை பெரியார் உருவாக்கிய மண். அண்ணா வளர்த்த மண். கலைஞர் இதை மீட்ட மண். தமிழ்நாடு அனைத்து மதத்தினரும் தங்கள் உரிமையோடும் பிற மதத்தினரோடு நல்லிணக்கத்தோடும் வாழுகின்ற மண் இது.கடந்த 4 ஆண்டு காலத்தில், தமிழ்நாட்டு வரலாறு காணாத அளவிற்கு 3 ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தி இருக்கிறோம்.

அதேபோல், ரூ.84 கோடி மதிப்பீட்டில் தேவாலயங்களையும், மசூதிகளையும் புனரமைக்க நிதி ஒதுக்கியிருக்கிறோம். இதுதான் நம்முடைய திராவிட மாடல். இதை எல்லாம் பார்த்துதான் மதவாத அரசியல் செய்கின்றவர்களுக்கு பற்றிக் கொண்டு எரிகிறது.

அவர்களால் தமிழ்நாட்டிற்கு செய்த வளர்ச்சியைப்பற்றி பேச முடியவில்லை. ஓட்டு கேட்க முடியவில்லை, முடியாது. செய்திருந்தால் தான், சொல்ல முடியும். அதனால் தான், இப்போது மதத்தை வைத்து அரசியல் செய்யலாம் என்று பார்த்தால், அங்கும் திமுக ஸ்கோர் செய்துவிட்டார்களே என்று கதறிக்கொண்டு இருக்கிறார்கள். ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்த படாத பாடுபடுகிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது. இந்த மண், தந்தை பெரியார் பண்படுத்திய மண். பேரறிஞர் அண்ணாவால் மேன்மைப்படுத்தபட்ட மண். தலைவர் கலைஞரால், வளர்க்கப்பட்ட மண். இப்படிப்பட்ட தலைவர்களை நீங்கள் கொச்சைப்படுத்தி வீடியோ போடுகிறீர்கள். அதை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது, அண்ணா பெயரில் கட்சி நடத்தும் கூட்டம் என்று மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து உள்ளார். .

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles