
பெட்டாலிங் ஜெயா ஜூலை 4 ; மலேசியாவின் 13 திட்டவரைவில் இந்தியர்கள் நிலை குறித்தும் முன்னேற்றங்கள் குறித்து விளக்கும் நிகழ்வு இல்திஸாம் அறக்கட்டளையின் தலைவர் குணசேகரன் கருப்பையாவின் வரவேற்புரையுடன் தொடங்கியது.
இந்நாட்டில் இந்திய சமுதாய மேம்பாடுகள் குறித்து சுமார் 200 பொது அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் வழங்கியுள்ள பல்வேறு பரிந்துரைகளை உட்படுத்திய 11 திட்டங்களை 5 முக்கிய மேம்பாட்டு திட்ட தொகுப்பாக பொருளாதார அமைச்சு மூலம் அரசாங்கத்திடம் இந்த அமைப்பு வழங்கியுள்ளதாக முன்னாள் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினரும் இல்திஸாம் அறக்கட்டளையின் முக்கிய செயற்குழு உறுப்பினருமான சார்ல்ஸ் சந்தியாகோ தெரிவித்தார்.
அதே வேளையில் இந்திய இளைஞர்களின் சில செயல்முறைகள் பற்றி ஏமாற்றம் தெரிவித்த அவர், இன்றைய இளைஞர்கள் நாட்டின் தலைவர்கள் மற்றும் சமூக தொண்டர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதை விட குண்டர் கும்பல் தலைவர்களின் மரணங்களுக்கு அனுதாபம் தெரிவிப்பதில் காட்டும் அக்கறை அச்சத்தை ஊட்டுவதாக உள்ளது என்றார்.
இது நமது இளம் சமுதாயத்தின் ரசனையை காட்டுகிறது. இளம் சமுதாயம் எதை நோக்கி நகர்கிறது, அவர்களை எது அதிகம் கவர்கிறது என்பதைக் காட்டும் அளவுகோலாக இது போன்ற செயல்கள் விளங்குவதாக குறிப்பிட்டார்.
13 வது மலேசியத் திட்டத்தின் முக்கிய கூறுகளில் ஒன்றாக கல்வியை குறிப்பிட்டுள்ள அவர்கள் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் கல்வியை பாதியில் கைவிடும் போக்கின் அபாயத்தை எடுத்து விளக்கியதுடன் அதை கையாள சமுதாயம் , பெற்றோர்கள் மற்றும் அரசாங்கத்தின் உடனடி கூட்டு செயல்களின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
குறைந்த மாணவர்கள் எண்ணிக்கையால் உரிமத்தை இழக்கும் அபாயத்தில் உள்ள பள்ளிகளின் நிலையை கவனித்து மாற்று இடங்களுக்கு பள்ளிகளை இடம் மாற்றுவது மற்றும் பள்ளி பேருந்து கட்டண சுமையால் மாணவர்கள் பள்ளிக்கு மட்டம் போடும் நிலை போன்றவற்றிலும் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை இந்த பரிந்துரைகள் எடுத்துரைப்பதாக கூறினார்.
கல்விக்கு ஏற்ற தொழில்கள் இந்தியர்கள் பெறுவது மற்றும் அரசு நிர்ணயித்துள்ள அடிப்படை சம்பளமான RM 1700 பெறாத பாட்டாளிகள் நிலை, ஆண்டுக்கு 5000 இந்திய இளைஞர்களுக்கு திவேட் கல்வி வழி அவர்களின் ஊதிய உயர்வு மற்றும் தொழில் திறன் மேம்பாடு அளிப்பதையும் வலியுறுத்துகிறது இத்திட்டம்.
இந்திய நகர்ப்புற ஏழைகளுக்கு வீட்டுவசதி, சமூக நலன் மற்றும் சுகாதார அணுகலை மேம்படுத்துதல். மூலோபாய துறைகளுக்குள் தொழில் முனைவோர் மற்றும் வேலை வாய்ப்புகளை ஊக்குவித்தல் , இளைஞர்களின் வளர்ச்சி, கலாச்சார அடையாளம் மற்றும் குடிமக்களின் பங்களிப்பை வலுப்படுத்துதல். கொள்கை வழங்கல், கண்காணிப்பு மற்றும் பொறுப்புக் கூறலுக்கான நிர்வாக வழிமுறைகளை நிறுவனமயமாக்கல் போன்ற பல அம்சங்களை திட்ட வரைவு உட்படுத்தி உள்ளதால் அது குறித்து கூடுதல் விளக்கமளிக்க பிரதமரை சந்திக்க வாய்ப்பு கேட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
13 வது மலேசிய திட்டத்தின் வழி நாட்டு வளர்ச்சியில் எல்லா மக்களிடையேயும், நிலையான, சமமான மேம்பாட்டு உருவாக்கம் இருக்க வேண்டும், அதில் இந்தியர்களும் உள்ளடக்கி இருக்க வேண்டும் என்ற சீர்திருத்தத்தை அது வற்புறுத்துவதாக கூறினார் முன்னாள் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினருமான சார்ல்ஸ் சந்தியாகோ,