
கோலாலம்பூர்,ஜூலை04:நாட்டில் தொடர்ந்து அறுவியல்,தொழில்நுட்பம்,பொறியியல் மற்றும் கணிதம் (STEM) கல்வியில் குறைந்து வரும் ஆர்வம் குறித்து தாம் பெரும் கவலை கொள்வதாக குறிப்பிட்ட பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் இவ்விவகாரத்தில் கல்வி அமைச்சு கூடுதல் கவனமும் தீவிர முனைப்பும் காட்ட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
கடந்தகாலங்களில் STEM கல்வி மீதான ஆர்வமும் ஈர்ப்பு அதிகரித்திருந்தது.நடப்பில் அதன் மீதான ஆர்வம் குறைந்து வருவது போல் இருப்பதாக தன் கருத்தினைப் பதிவு செய்த சிவகுமார் அதற்கான நுண்ணியமான காரணங்களை கண்டறியுமாறு கல்வி அமைச்சை கேட்டுக் கொண்டார்.
இன்று காலை புத்ராஜெயாவில் கல்வி அமைச்சு,தேசிய கல்வி மேம்பாடு மற்றும் மனிதவள மேம்பாடு சிறப்புத் தேர்வு குழு உறுப்பினர்களிடையே நடைபெற்ற சந்திப்பில் சிவகுமார் தனக்கெழுந்த ஐயத்தை கோரிக்கையாக முன்வைத்தார்.
கல்விக் கொள்கை குறித்த ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலாக இந்த அமர்வு நடந்ததாக கூறிய அவர் நிறைவான ஒரு சந்திப்பில் கலந்து கொண்ட நிறைவையும் தான் கொண்டதாக மேலும் கூறினார்.
கடந்தக்காலங்களில்,அதாவது எனது பள்ளி நாட்களை நினைத்துப் பார்க்கையில் அன்றைய ஆசிரியர்கள் அறிவியல் துறையிலிருந்து இலக்கியம் அல்லது மற்றபாடத்துறைக்கு மாற ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்பதை நினைவுக்கூர்ந்த அவர் அறிவியல் துறையில் மாணவர்களை ஊக்குவிப்பதில் தீவிர முனைப்பு காட்டப்பட வேண்டும் எனவும் அவர் கருத்துரைத்தார்.
அன்றைக்கு அறியவியல் துறையில் மாணவர்களை ஊக்குவிக்கவும் அதுசார்ந்து கல்வியை தொடரவும் ஆசிரியர்கள் உறுதியாக இருந்தனர்.ஆனால்,இன்றைக்கு அச்சிந்தனை ஆக்கப்பூர்வமாக இல்லாதது வருத்தம் அளிக்கிறது.இது தொடரக்கூடாது என்றும் சிவகுமார் எச்சரித்தார்.இச்சிக்கல் தீர கல்வி அமைச்சு என்னமாதிரியான செயல்திட்டங்களை கொண்டுள்ளது எனவும் கேள்வி எழுப்பிய அவர் வருங்காலத்தில் பொது பல்கலைக்கழகங்கள்,போலிடெக்னிக்,தொழிற்துறை கல்வி (TVET) ஆகியவை STEM கல்விக்கு மாணவர்கள் பற்றாக்குறையை எதிர்கொள்ளக்கூடிய சூழல் ஏற்படும் எனவும் நினைவுறுத்தினார்.
இச்சூழல் நீடித்தால் வருங்காலத்தில் வேலை சந்தைக்கு தேவைகளுடன் பொருந்திய பட்டதாரிகள் இல்லாமல் சிரமத்தை எதிர்நோக்குவதோடு பல்வேறு சிரமங்களோடு நாட்டின் முன்னேற்றத்திற்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.
இந்த விடயத்தை மிக தீவிரமாக கல்வி அமைச்சு கண்காணிக்க வேண்டும்.தொடரும் அலட்சியத்தால் நாம் கல்வி மேம்பாடு,வளர்ச்சியில் பெரும் பின்னடைவை எட்டக்கூடும்.அறியல் கல்வி சார்ந்த துறையில் மாணவர்களை ஊக்குவிக்கவும் அதுசார்ந்து அவர்கள் தங்களின் எதிர்காலத்தை அமைத்து கொள்ளவும் தூரநோக்கு மற்றும் நீண்டக்கால கல்வியல் வளர்ச்சியை முன்னிறுத்து கல்வி அமைச்சு நன்நிலையிலான கல்வி திட்டத்தை வரையறுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
அதேவேளையில்,சிவகுமாரின் கருத்துகள் கவனிக்கத்தக்கது என்றும்.நாட்டின் கல்வி வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் கவனிக்கத்தக்கது எனவும் கல்வி அமைச்சர் ஒப்புக்கொண்டதை நினைவுக்கூர்ந்த சிவகுமார் காலத்திற்கு ஒப்ப கல்வியல் திட்டங்கள் நிச்சயம் வரையறுக்கப்படும் என தாம் நம்புவதாகவும் அவர் மேலும் கூறினார்.