இனவாதத் தூண்டலை முறியடிக்க அரசாங்கத்தின் கடுமையான நடவடிக்கைக்கு இந்தியச் சமூக வர்த்தக அமைப்புகள் வரவேற்பு!

கோலாலம்பூர், மார்ச் 15-
சமீபகாலமாக ஒரு சில தரப்பினரால் திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் இன – மத ரீதியிலான தூண்டல் நடவடிக்கைகள், பொதுப் பாதுகாப்புக்கும் நாட்டின் அமைதிக்கும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன. இத்தகைய சூழலில், பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்கும் வகையிலான இச்செயல்களை ஒடுக்க அரசாங்கம் எடுத்து வரும் கடுமையான நடவடிக்கைகளை மலேசிய இந்தியச் சமூக அமைப்புகள் ஒருமனதாக வரவேற்றுப் பாராட்டியுள்ளன.

முன்னதாக, மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் ஒரு செய்தியாளர் சந்திப்பின் மூலம் இத்தகைய தூண்டுதல் ஏஜெண்டுகளின் செயல்களைக் கடுமையாகச் சாடியதோடு, நாட்டின் நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்ய, இப்பிரச்சினையை அமைச்சரவைக் கூட்டத்திற்கும் கொண்டு சென்றார்.

அமைச்சரவையின் முடிவைத் தொடர்ந்து, தூண்டுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்ட நபர்களுக்கு எதிராக, அரசாங்கம் அரச மலேசிய போலீஸ் படையின் மூலம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாப்பதற்கும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டியதற்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் ஆகியோருக்குப் பல்வேறு இந்திய வணிகச் சங்கங்கள் தங்களது நன்றியையும் பாராட்டையும் கூட்டறிக்கை மூலம் தெரிவித்துள்ளன.

இது குறித்து மலேசிய இந்திய வர்த்தக, தொழில்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் – மைக்கி (MAICCI) தலைவர் டத்தோஸ்ரீ என். கோபாலகிருஷ்ணன் கூறுகையில், பிரதமர் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் ‘மலேசியா மடாணி’ கொள்கையின் கீழ் இந்தியச் சமூகத்தின் நலன்களைப் பாதுகாப்பதில் தெளிவான அர்ப்பணிப்பைக் கொண்டுள்ளது என்றார்.

தூண்டுதல் ஏஜெண்டுகளைக் கைது செய்து தண்டிப்பதன் மூலம், இந்தியச் சமூகத்தின் குரலுக்கு அரசாங்கம் மதிப்பளிப்பதுடன் பல்லின சமூக அமைதியைப் பேணுவதில் தனது உறுதியை நிரூபித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மலேசிய இந்திய முஸ்லிம் வர்த்தக, தொழில்துறை சங்கத்தின் – மிம்காய்ன் (MIMCOIN) தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ஹமித் பி.வி. அப்து, நாட்டின் ஒருமைப்பாட்டைப் பேணும் அரசாங்கத்தின் முயற்சிக்குத் தனது முழு ஆதரவைத் தெரிவித்தார்.

மலேசியா சுதந்திரம் அடைந்தது முதல் பல தசாப்தங்களாகப் பல்வேறு இன மக்கள் இணக்கமாக வாழ்ந்து வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், நாட்டின் தனித்துவமான ஒற்றுமையைச் சிதைக்க முயலும் எவருக்கும் இடம் கொடுக்கக் கூடாது என்று வலியுறுத்தினார்.

அதேபோல், கோலாலம்பூர் – சிலாங்கூர் இந்திய வர்த்தக, தொழில்துறை சங்கத்தின் (KLSICCI) தலைவர் நிவாஸ் ராகவன், இந்திய வணிகச் சமூகம் அரசாங்கத்துடன் இணைந்து அமைதியைப் பாதுகாக்கும் என்றும், எவ்விதமான இன-மதத் தூண்டல்களையும் நிராகரிக்கும் என்றும் தெரிவித்தார்.

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களால் உலகப் பொருளாதாரம் நிச்சயமற்ற நிலையில் இருக்கும் இச்சமயத்தில், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதிலும் மக்களின் நல்வாழ்வைப் பாதுகாப்பதிலும் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்த அமைப்புகள் கூட்டாக வலியுறுத்தின.

இனங்களுக்கிடையிலான இணக்கமான உறவே நாட்டின் பொருளாதாரத் தாரக மந்திரம் என்றும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெறவும் வணிக வளர்ச்சியை உறுதி செய்யவும் அமைதியான சூழல் அவசியம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

இதற்கிடையில், மார்ச் 14 அன்று போலீஸ் படைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் கூறுகையில், ஜம்ரி வினோத் – தமீம் தஹ்ரி ஆகிய இரு நபர்களுக்கு எதிராகக் குற்றவியல் சட்டத்தின் 505(பி) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தற்போது அவ்விருவரும் தாய்லாந்திற்குத் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்யத் தாய்லாந்து அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles