கெடாவில் புதிய இந்து மின் சுடலை கட்டுவதற்கு மடானி அரசாங்கம் 25 லட்சம் வெள்ளி மானியம் – சண்முகம் மூக்கன் அறிவிப்பு

சுங்கை பட்டாணி, மார்ச் 15-
கெடா மாநிலத்தில் புதிய இந்து மின் சுடலை கட்டுவதற்கு மடானி அரசாங்கம் 25 லட்சம் வெள்ளியை ஒதுக்கி உள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களின் இந்திய சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன் தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக கெடா மாநில இந்திய சமூகம் முன் வைத்த கோரிக்கை மற்றும் விண்ணப்பங்களுக்கு செவி சாய்த்து இந்த மிகப்பெரிய மானியம் வழங்கப்படுகிறது.

பிரதமருடன் தாம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியதன் பலனாக இந்த மானியம் வழங்கப்பட்டுள்ளது.

சுங்கை பட்டாணி ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தின் மேற்பார்வையில் நடைபெறும் இந்த திட்டம் அடுத்த ஆண்டு ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் பூர்த்தி அடையும்.

மடானி அரசாங்கம் மானியம் வழங்கியது போக நிதி பற்றாக்குறை நிலவினால் ஆலய நிர்வாகமே அதற்கான பொறுப்புகளை ஏற்று கொள்ள வேண்டும் .

இந்த புதிய மின் சுடலை கட்டுவதற்கு நிலம் மற்றும் அரசு அலுவலக அனுமதிகள் தொடர்பான பணிகள் உடனடியாக தொடங்கப்படும். மேலும் இந்த பணிகளை நிர்வாகமே மேற்கொள்ளும்.

தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக செய்யப்பட்ட முயற்சிகளின் பலனாக இப்போது இதற்கு நல்ல தீர்வு பிறந்துள்ளது என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

நாட்டிலுள்ள இந்திய சமூகத்திற்கும் குறிப்பாக இந்து சமூகத்திற்குமான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக மடானி அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் தொடர்ந்து நல்ல முன்னேற்றத்தை காட்டி வருகின்றன.

கெடா மாநிலத்தின் சுங்கை பட்டானி ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி தேவஸ்தானம் கோவில் நிர்வாகம் அமைக்கப்படவுள்ள புதிய மின் சுடலை திட்டத்தின் பணிகள் தற்போது சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த புதிய மின் சுடலை திட்டம் மடானி அரசின் முயற்சியின் கீழ் நிதி அமைச்சகம் (MOF) வழியாக அனுமதி பெற்றதாகவும், இந்து சமூகத்தின் தேவைகளை கருத்தில் கொண்டு புதிய மின் சுடலை வசதிகளை உருவாக்க வேண்டும் என்ற பிரதமர் டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களின் நோக்கத்துடன் இணைந்ததாகவும் அவர் கூறினார்.

இந்த திட்டம் பிரதமர் அறிவித்த முக்கியமான முயற்சிகளில் ஒன்றாகும். கடந்த 2024 செப்டம்பர் 25 அன்று தீபாவளி சிறப்பு அறிவிப்பின் போது, நாட்டின் பல மாநிலங்களில் இந்திய சமூகத்திற்கான புதிய மின் சுடலை வசதிகளை மேம்படுத்துவதற்காக மொத்தம் RM20 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அவர் நினைவூட்டினார்.

அவர் மேலும் கூறுகையில், நாட்டின் சில பகுதிகளில் இன்னும் போதுமான மின் சுடலை வசதிகள் இல்லாததால் இந்து சமூகங்கள் பல சவால்களை எதிர் கொள்கின்றன.

இதன் காரணமாக, சில குடும்பங்கள் இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய மற்ற மாநிலங்களுக்கு தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை உருவாகிறது.

இது குடும்பத்தினருக்கு கூடுதல் மன அழுத்தத்தையும் செலவையும் ஏற்படுத்துகிறது.

“இந்த நாட்டில் உள்ள இந்து சமூகத்தின் அடிப்படை தேவைகள் உரிய கவனத்துடன் பார்க்கப்பட வேண்டும் என்று பிரதமர் விரும்புகிறார்.

மின் சுடலை என்பது வெறும் கட்டிட வசதி அல்ல; அது மத மரபு, பாரம்பரியம் மற்றும் துயரமான நேரத்தில் குடும்பத்தின் மரியாதையுடன் நேரடியாக தொடர்புடைய ஒன்று,” என்று அவர் கூறினார்.

இந்த முயற்சியின் கீழ் மொத்தம் 10 புதிய மின் சுடலை திட்டங்கள் எட்டு மாநிலங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளன.

அவை ஜொகூர், பேராக், சிலாங்கூர், மலாக்கா, கெடா, நெகிரி செம்பிலான், பகாங் மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்கள் ஆகும்.

உள்ளூர் தேவைகளை கருத்தில் கொண்டு, ஜொகூர் மற்றும் பேராக் மாநிலங்களுக்கு தலா இரண்டு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மற்ற மாநிலங்களுக்கு தலா ஒரு மின் சுடலை வசதி வழங்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் ஐந்து மாநிலங்களுக்கே இந்த திட்டம் வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சமூகம் ஆகோவில் நிர்வாகத்தினருடனும் நடந்த ஆலோசனைகளின் பின்னர், திட்டத்தை மேலும் விரிவுபடுத்த அரசு முடிவு செய்தது.

அதன் அடிப்படையில் பகாங் மாநிலமும் திட்டத்தில் சேர்க்கப்பட்டது.

“அரசு இந்த முடிவுகளை நிலைமையை நேரடியாக மதிப்பீடு செய்து எடுத்துள்ளது. சில இடங்களில் புதிய மின் சுடலை கட்டப்படும். சில இடங்களில் ஏற்கனவே உள்ள வசதிகளில் கூடுதல் இன்சினரேட்டர் (தகன இயந்திரம்) சேர்த்து சேவையின் திறனை அதிகரிக்கப்படுகிறது,” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், ஜொகூர் மாநிலம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலில் இந்த ஒதுக்கீட்டை பெற்றது. அதன் பின்னர் மே மாதத்தில் பேராக் மாநிலம் பெற்றது. மற்ற திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள் அனைத்தும் 2025 அக்டோபர் மாதத்திற்குள் முழுமையாக வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

சுங்கை பட்டாணி திட்டத்தைப் பொருத்தவரை, கோவில் நிர்வாகம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணப்பித்தது. அதன் பின்னர் அதே ஆண்டு அக்டோபரில் அனுமதி வழங்கப்பட்டது.

தற்போது நடைபெற்று வரும் இந்த கட்டுமானம் வடக்கு தீபகற்ப பகுதிகளில் உள்ள இந்து சமூகத்திற்கு பெரிய பயன் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டங்களின் செயல்பாடு இதுவரை வெளிப்படையாகவும் திறம்படவும் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மொத்தம் 10 கிரிமேட்டோரியம் திட்டங்களும் 2027 ஆம் ஆண்டின் இறுதிக்குள் முழுமையாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நாட்டின் பல பகுதிகளில் உள்ள இந்து சமூகங்களுக்கு சீரமைக்கப்பட்ட மற்றும் எளிதில் அணுகக்கூடிய வசதிகள் கிடைக்கும்.

இந்த திட்டங்கள் சரியாக முன்னேறுவதைக் கண்காணிக்க, சம்பந்தப்பட்ட அனைத்து மாநிலங்களுக்கும் அவ்வப்போது தள ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

“மலேசியாவில் உள்ள ஒவ்வொரு சமூகத்திற்கும் சமமான கவனம் வழங்கப்பட வேண்டும் என்பது அரசின் தொடர்ச்சியான உறுதிப்பாடு.

இந்த முயற்சி, நாட்டின் பல்வகை கலாச்சாரங்களையும் மதங்களையும் மதிக்கும் ஒற்றுமை உணர்வை பிரதிபலிக்கிறது .

இந்த தருணத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று சண்முகம் மூக்கன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles