
கிள்ளான், ஜூலை 4 – கிள்ளானில் இந்திய வர்த்தகர்கள் உள்பட சமூகம் எதிர்நோக்கும் பலவேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கும் நோக்கில் கிள்ளான் அரச மாநகர் மன்றத்தில் (எம்.பி.டி.கே.) இடம் பெற்றுள்ள ஐந்து இந்திய கவுன்சிலர்கள் நேற்று சந்திப்பு நடத்தினர்.
இந்த சந்திப்பில் இங்குள்ள இந்திய வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், இவ்வாண்டு தீபாவளி சந்தைக்கான ஏற்பாடுகள், லிட்டில் இந்தியா பகுதியில் இந்திய வணிகர்களுக்காகப் பிரத்தியேகமாக ஆப்டவுன் எனப்படும் வியாபார மையம் அமைப்பது, சிம்பாங் லீமா இடுகாடு எதிர்நோக்கி வரும் பிரச்சனைகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக மாநகர் மன்ற உறுப்பினர் அருள்நேசன் ஜெயபாலன் கூறினார்.
இந்த சந்திப்பின் தொடர்ச்சியாக இம்மாதம் 15ஆம் தேதி மாநகர் மன்றத்துடன் சிறப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், மாநகர் மன்றத்தின் லைசென்ஸ், திட்டமிடல், கட்டிடம், அமலாக்கம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளின் இயக்குநர்கள் கலந்து கொள்ளும் இக்கூட்டத்தில் மேல் குறிப்பிட்ட விவகாரங்கள்
முன்வைக்கப்படும் என்றார்.
எம்.பி.டி.கே. தலைமையகத்தின் கவுன்சிலர்கள் கூட்ட அறையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பி.யுகராஜா, அருள்நேசன் ஜெயபாலன், பி.குமணன், தங்கராஜா, எஸ்.ஞானேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.