

ஈப்போ,ஜூலை13- நாட்டின் முன்னோடி எழுத்தாளரும் பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முதல் தலைவருமான தமிழ்க்குயிலார் க.கலியபெருமாள் மற்றும் அவரது துணைவியார் ருக்குமணி லோகா ஆகியோரின் நினைவுநாளில் அவர்களின் இரு நூல் சிறப்பாக வெளியீடு கண்டது.
தமிழ்க்குயிலார் தம்பதியர் நினைவுநாள் அவர்களின் குடும்பத்தினரால் வள்ளலார் அன்பு நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அவ்விரு நூலும் அங்கு சிறந்த அறிமுகங்களோடு வெளியீடும் கண்டது.
தமிழ்க்குயிலாரின் “தென்றல் சிரிக்கின்றது” என்னும் சிறுகதை நூலும் அவரது துணைவியாரின் “தீர்ந்த வாழ்வும் தீராத கதையும்” என்னும் நூலும் அவரது மகள் கலைவாணி வெளியீடு செய்ய வருகையாளர்கள் நூல்களைப் பெற்று கொண்டனர்.
அதேவேளையில்,பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு சங்கத்தின் பணிமனையில் அமைக்கப்பட்டிருக்கும் தமிழ்க்குயிலார் படிப்பகத்தின் பராமரிப்பிற்கு வெ.500ஐ அவரது புதல்வர் தமிழ்த்திரு கலையரசு சங்கத்தின் தலைவர் சிவாலெனின் அவர்களிடம் வழங்கினார்.
மிகவும் நேர்த்தியாகவும் நிறைவாகவும் நடைபெற்ற நினைவுநாள் நிகழ்ச்சியில் தமிழ்க்குயிலார் தம்பதியர்களின் வாழ்வும் எழுத்து பயணமும் நனிச் சிறப்பாக நினைவுக்கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவரோடு துணைத்தலைவர் திரு.ச.முனியாண்டி,செயலவை உறுப்பினர்கள் திருமதி.இளவரசி,திருமதி.குழந்தைமேரி,திரு.சுப.கதிரவன் ஆகியோருடன் சங்கத்தின் மேனாள் தலைவர் கவிஞர் ந.கு.முல்லைச் செல்வன் மற்றும் பாவலர் முத்துப்பண்டி மற்றும் சபா.கணேஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

