கோத்தா கெமுனிங் தொகுதியில் இலவச மருத்துவப் பரிசோதனை

ஷா ஆலம், ஜூலை  16 – சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டிலான சிலாங்கூர் சாரிங்  இலவச மருத்துவப் பரிசோதனை இயக்கம்  இம்மாதம் 27ஆம் தேதி சனிக்கிழமை கோத்தா கெமுனிங் தொகுதியில் நடைபெறவுள்ளது.

பொதுவான  உடல் பரிசோதனை, இரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகம்,  புற்றுநோய், கண் மற்றும் பல் பரிசோதனைகளை இலவசமாகப் மேற்கொள்வதற்கான வாய்ப்பை வழங்கும் இந்த திட்டம் காலை 9.00 மணி தொடங்கி மாலை 3.00 மணி வரை ஷா ஆலம் செக்சன் 28, டேவான் கெனாங்காவில்  நடைபெறும்.

இந்த இலவச மருத்துவப் பரிசோதனையில் பங்கேற்க விரும்புவோர் செலங்கா செயலி வாயிலாக முன்பதிவு செய்ய  அழைக்கப்படுகிறார்கள்.

தனி நபர் இடர் மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த மருத்துவப் பரிசோதனைச் சேவை  வழங்கப்படும். ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் செல்கேர் ஹாட்லைனை 1-800-22-6600 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

பின்வரும் நான்கு வழிமுறைகளைப் பயன்படுத்தி சிலாங்கூர் சாரிங் திட்டத்தில் பதிவு செய்யலாம்.

1. செலங்கா செயலியைப் பதிவிறக்கம் செய்யவும்
2.  சிலாங்கூர் சாரிங் பட்டனை அழுத்தவும்
3. கேள்வித்தாள் படிவத்தை பூர்த்தி செய்யவும்
4. மருத்துவப் பரிசோதனை நடைபெறும் இடம் மற்றும் தேதியைத் தேர்ந்தெடுக்கவும்

கடந்த 2022ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட  இந்த சிலாங்கூர் சாரிங் இலவச மருத்துவப் பரிசோதனைத் திட்டத்தை  தொடர மாநில அரசு  2025 வரவு செலவுத் திட்டத்தில் 20 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது.

இந்த இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டத்தின் வாயிலாக 2024ஆம் ஆண்டு  7,000 பேர் பயனடைந்ததாகவும்  அவர்களில் 38 சதவீதம் பேர் 46 முதல் 64 வயதுடையவர்கள் என்றும் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்தாண்டு டிசம்பர் 17 ஆம் தேதி கூறியிருந்தார்.

குடும்ப உறுப்பினர்களின் மருத்துவப் பின்னணி, உடல் பருமன் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பவர்கள் மத்தியில் முன்கூட்டியே நோயைக் கண்டறிய உதவுவதற்காக இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles