
சிரம்பான், ஜூலை 29 – கொலை செய்யப்பட்டு ஜெம்போல், ரொம்பின் பகுதியில் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆறு வயது சிறுவனின் உடலை நேற்று மாலை போலீசார் கண்டுபிடித்தனர்.
அச்சிறுவனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து நேற்று மாலை 4.30 மணியளவில் தமது துறைக்குத் தகவல் கிடைத்தாக நெகிரி செம்பிலான் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ அகமது ஜாஃபிர் முகமது யூசோப் கூறினார்.
கடந்த ஜூலை 24 ஆம் தேதி ஜோகூர் பாரு, தாமான் புக்கிட் இண்டாவில் அச்சிறுவன் காணாமல் போனது தொடர்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்த வழக்கு 2001 ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் 31 (1) (a) பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு காணாமல் போன நபராக வகைப்படுத்தப்பட்டிருந்தது என அவர் கூறினார்.
சிறுவன் காணாமல் போனது தொடர்பான புகாரைத் தொடர்ந்து ஜோகூர் காவல்துறையினர் அவனது தந்தை என்று நம்பப்படும் 36 வயதுடைய நபரை அதே தினம் நண்பகல் 12.00 மணியளவில் ஜோகூர் பாருவில் கைது செய்தனர். அவ்வாடவர் வழங்கியத் தகவல் சிறுவனின் உடலைக் கண்டுபிடிப்பதற்கு வழிவகுத்தது என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த வழக்கு தற்போது குற்றவியல் சட்டத்தின் 302 வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
bernama