
ஷா ஆலம், ஜூலை 29-
கோத்தா கெமுனிங் தொகுதியிலுள்ள புக்கிட் கெமுனிங் வட்டாரத்தில் பொது இடங்களிலும் கண்ட இடங்களிலும் குப்பைகளை வீசும் தனிநபர்கள் மற்றும் லோரிகளில் கொட்டும் தரப்பினரை கண்டறிந்து காணொளி, புகைப்படம் உள்ளிட்ட ஆதாரங்களை வழங்குவோருக்கு தலா 1,000 வெள்ளி வெகுமதியாக வழங்கப்படும் என்று ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் கவுன்சிலர் யோகேஸ்வரி சாமிநாதன் கூறியிருப்பதை பெரிதும் வரவேற்பதாக சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.
தகவல் அளிப்போருக்கு வெகுமதி அளிக்கும் இந்த திட்டம் ஜூலை 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று யோகேஸ்வரி சாமிநாதன் கூறியுள்ளார்.
புக்கிட் கெமுனிங் உட்பட சிலாங்கூர் மாநில முழுவதும் இந்த திட்டத்தை சம்பந்தப்பட்ட மாநகர் மன்றங்கள் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று டாக்டர் சுரேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
சட்டவிரோதமாக குப்பைகளை வீசுவோரை சட்டத்தின் பிடியில் நிறுத்தி அவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைப்பதற்கு ஏதுவாக தேவையான ஆதாரங்களை வழங்குவோருக்கு இந்த 1,000 வெள்ளி வெகுமதி சிறப்பானதாக இருக்கும்.
கண்ட கண்ட இடங்களில் குப்பைகள் கொண்டும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இது ஒரு சிறந்த வழியாகும்.
ஆகவே சிலாங்கூர் மாநில அரசு மற்றும் ஊராட்சி – மாநகர் மன்றங்கள் வெகுமதி தரும் திட்டத்தை அமல்படுத்தினால் இந்த பிரச்சனைக்கு நல்ல முறையில் தீர்வு காணப்படலாம் என்று அவர் சொன்னார்.
கண்ட கண்ட இடங்களில் குப்பைகளை வீசுவோர் பிரச்சினை ஒரு தொடர்கதையாகவே உள்ளது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வெகுமதி தரும் திட்டம் கைகொடுக்கும் என்று அவர் சொன்னார்.

