
ஈழத் தமிழர்கள் கொடியவர்கள் போன்று சித்தரித்து காட்சிகள் அமைக்கப்பட்டு, அண்மையில் வெளிவந்த தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவின் “கிங்டம்” திரைப்படத்தை மலேசிய திரையரங்குகள் திரையிடுவதைத் தவிர்க்க வேண்டுமென உலகத் தமிழர் பாதுகாப்புச் செயலகத்தின் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.
இத்திரைப்படத்தால் தமிழர்களின் மனங்கள் புண்பட்டிருந்தால் வருந்துகிறோம் என “கிங்டம்” திரைப்பட குழுவினரே பொது மன்னிப்புக் கேட்கப்பட்டிருக்கும் வேளையில் மலேசிய (LFS) திரையரங்குகளில் இத்திரைப்படம் திரையிடப்படுவது மிகுந்த வேதனையை அளிக்கிறது என்றார்.
மேலும் தன்னாட்சி உரிமைக்காக போராடிய தமிழீழ இராணுவமான விடுதலைப் புலிகளையும் ஈழச் சொந்தங்களையும் இழிவுபடுத்தி, உண்மைக்குப் புறம்பான வரலாற்றுக்கு எதிரான வகையில் காட்சி அமைத்தது கண்டனத்துக்குரியது என்றார்.
தமிழர்கள் அல்லாதவர்கள் தமிழர்கள் விடயத்தை திரைப்படமாக்கும்போது மிகுந்த கவனம் தேவை என எச்சரித்தார்.
இப்படத்தை திரையிடுவதை நிறுத்த கோரி தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி உட்பட தமிழ் உணர்வாளர்கள் ஒன்றிணைந்து திரையரங்குகள் முற்றுகையை என பலத்த போராட்டங்கள் நடந்து வருகிறது என்பதை இங்குள்ள திரையரங்கு உரிமையாளர்கள் கவனிக்கவில்லையா.?
தமிழருக்கு எதிராக படம் எடுத்து, அதை தமிழர்களிடமே காண்பித்து விற்று வசூலிப்பது எந்த வகையில் நியாயம்.?
இன மானத்தை விற்று வருமானத்தை ஈட்டுவதா.? இது தொடருமானால் இனமானம் கொண்ட மலேசியத் தமிழர்கள் இனி எந்த படமானாலும் திரையரங்கை புறக்கணிப்பார்கள் என்றார்.
ஆகையால் உலகத் தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து மலேசிய திரையரங்கிலிருந்து “கிங்டம்” திரைப்படத்தை விளக்கக் கோரி உலகத் தமிழர் பாதுகாப்புச் செயலகம் சார்பில் வேண்டுகோள் வைப்பதாக திரு.பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.

