
பினாங்கு ஆகஸ்டு 21. சமீப காலமாக மலேசியப்
பள்ளிகளில் ஒரு பரவலானப்
பிரச்சனையாக உருவெடுத்து வரும் பகடிவதைச் சம்பவங்கள் தொடர்பில்,உகந்த வகையில் தீர்வு காணப்பட
வேண்டுமென்று, பினாங்கு இந்து
இயக்கம், அரசுக்கு கோரிக்கை
விடுத்திருக்கிறது.
இத்தகையச்
சம்பவங்களின் பின்னணியில்
சம்பந்தப்பட்ட பள்ளிகள் அல்லது
அவற்றுடன் தொடர்புடைய
தரப்பினர்களின் விவரங்களைப்
பாதுகாக்கும் நோக்கத்தின் பேரில், பல்வேறு சம்பவங்கள்
புகாரளிக்கப்படாமல் மறைக்கப்படுவதால், நிகழ்பவை எல்லாம் நிராதரவற்றச் சூழலில்
நிர்மூலமாவது, வேதனையானது
என்றும் அவ்வியக்கம் முறையிட்டிருக்கிறது.
இவ்வாறு பகடிவதைக்கு உள்ளாகும் மாணவர்களின்
கல்வி வளர்ச்சி மற்றும் அவர்களின் நடத்தைக்கு சாதகமற்றத்
தாக்கத்தை ஏற்படுத்துவதால்,
அவர்கள் பருவ வயதிலேயே
பாதிப்புக்குள்ளாகும் கொடுமை, சமூகப் பிரச்சனைகளில் ஓர் அங்கமென்றும், இது குறித்து
கல்வி அமைச்சு விழிப்புணர்வை
ஏற்படுத்தும் நடவடிக்கையில்
பள்ளிகளுக்கு வழி காட்டுதல்களுடன்
கூடிய சுவரொட்டிகள் பலவற்றை
வெளியிட்டு இதனைக்
கட்டுப்படுத்துவதற்கு முயன்றுள்ள
நிலையிலும், இவை அதிகரித்தே
கொண்டிருப்பதை, பல ஊடகங்கள்
தொடர்ச் செய்திகளாக வெளியிடுகின்ற அவலம்,
கவலையளிப்பதாகவே நீண்டு
வருவதை அவ்வியக்கத்
தலைவர், டத்தோ பி.முருகையா
சுட்டிக் காட்டியுள்ளார்.
பள்ளிக்கூடங்களிலும் கல்வி
நிறுவனங்களிலும் பரவலாக நிகழும்
இச்சம்பவங்கள் அவற்றின் மாணவர் விவகார ஆசிரியர்களின்
கவனிப்பாரற்ற அல்லது பொறுப்பற்ற
தன்மையை புலப்படுத்துவதாகவும், பலசாலி மாணவர்கள் பலவீனர்கள் மீது தொடுக்கும் அச்சுறுத்தல்களும்
அடாவடித்தனங்களும் பொறுப்புணர்வுடன்
கண்காணிக்கப்படுவது அவசியமென்று கூறியிருக்கும்
முருகையா, பகடிவதைக்கு
இலக்காகும் அத்தகு மாணவர்கள்
குறைந்த சுயமரியாதையைக்
கொண்டிருக்கும் சூழலுக்கு
தள்ளப்படுகின்ற வேளையில்,
தங்களை தனிமைப்படுத்துவதற்கும் வழியேற்படுத்திக் கொள்வதை
சாதாரணமாகக் கருதி விட
முடியாது எனவும்
பதைத்துள்ளார்.
இத்தகைய ரீதியில் பாதிப்புறும்
மாணவர்கள் மன உளைச்சலால்
வேண்டத்தகாத காரியங்களில்
ஈடுபடுவதும், அடுத்து நிகழவிருப்பதை எண்ணி எண்ணி
மனநிலை குன்றி ,தற்கொலை போன்ற பாதகமான முடிவுகளுக்கு
செல்வதும், கடுமையாகக் கருதப்பட வேண்டிய விவகாரமென்றும்
கருத்துரைத்துள்ள முருகையா,
பகடிவதை இல்லாது, பலவீன
மாணவர்களும் அச்சமின்றி
சமூக ரீதியாகவும் கல்வி
ரீதியாகவும் ஒரு பாதுகாப்பானச்
சூழலை அனுபவிப்பற்கு ஏதுவாக,
பினாங்கு இந்து இயக்கம்
கீழ்காணும் நடவடிக்கைகளுக்கு
பரிந்துரைக்கிறது.
- கல்வி நிறுவனங்களில் உள்ள
மாணவர்கள் ‘Esha பிரிவு’ (பிரிவு 507D)
பகடிவதையின் விளைவுகளை அறிய,
பகடிவதை எதிர்ப்புச் சட்டம் குறித்து
விழிப்புணர்வு பெற வேண்டும். - அனைத்து வகையான
பகடிவதைகள், பாலியல்
துன்புறுத்தல் போன்ற மாணவர்
பிரச்சினைகளைக் கையாளும்,
குடிமையியல் போன்ற மதிப்பீடு
செய்யப்படாத பாடத்தை
அறிமுகப்படுத்தி, மாணவர்களை
மையமாகக் கொண்ட வகுப்பு
விவாத அமர்வுகளாக வழங்கலாம். - எல்லா பள்ளிக்கூடங்களிலும்
தனியார் கல்வி நிறுவனங்களிலும்
மாணவர்-ஆலோசகர் விகிதத்தை
அதிகரிப்பது குறித்து அமைச்சகம்
பரிசீலிக்க வேண்டும். - பள்ளிகளில் கைபேசிகள்
தடைசெய்யப்பட்டுள்ளதால்,
அமைச்சகம் அல்லது காவல்
துறையின் பகவடிவதை எதிர்ப்புப்
பிரிவுகளுடன் நேரடி
இணைப்புகளுக்கு ஏதுவாக,
பள்ளிகளில் ஒரு ஹெல்ப்லைன்
தொலைபேசிச் சேவையை
ஏற்படுத்துதல் குறித்து கல்வி
அமைச்சகம் பரிசீலிக்கலாம். - பகடிவதை வழக்குகளுக்கு
தொடர்பு கொள்ள வேண்டிய
ஹாட்லைன் எண்கள் அனைத்து
கல்வி நிறுவனங்களிலும் மூலோபாய ரீதியாகக் காட்டப்பட வேண்டும். - கல்வி நிறுவனங்களில்
பகடிவதை போன்ற அடாவடிகள்
மற்றும் குண்டர் கும்பல்
தாக்குதல்கள் குறித்து காவல்
துறை அதிகாரிகளால் வழக்கமான
பேச்சு வார்த்தைகளை நடத்த,
பள்ளி அதிகாரிகள் திட்டமிட
வேண்டும், இதன் விளைவுகள்
குறித்த விழிப்புணர்வை
ஏற்படுத்த வேண்டும். - மாணவர்களின் பாதுகாப்பைக்
கண்காணிக்க பள்ளிகளில் சிசிடிவி
கேமராக்களை நிறுவுவதற்கும்
பராமரிப்பதற்கும் கல்வி
அமைச்சகத்திற்கு அதிக
ஒதுக்கீடு வழங்குவதை தேசிய
வரவு செலவு மதிப்பீட்டு
அறிக்கையில் பரிசீலிக்க வேண்டும்.
தனியார் கல்வி நிறுவனங்களுக்கும்
இது கட்டாயமாக்கப்பட வேண்டும். - பள்ளி அதிகாரிகளால்
பகடிவதை தொடர்பான வழக்குகளை
மறைப்பது, கடுமையாகக் கையாளப்பட வேண்டும்.

