நிதி ஒதுக்கீட்டில் இன விவகாரத்தை எழுப்ப வேண்டாம் – பிரதமர் நினைவுறுத்து

கோலாலம்பூர், ஆக. 25 – பதிமூன்றாவது மலேசியா திட்டத்தின் கீழ் அனைத்து மேம்பாடுகளும் நியாயமாகவும் கவனமாகவும் மேற்கொள்ளப்படுவதால், ஒரு தரப்பு அல்லது இனம் பெறும் ஒதுக்கீட்டின் அளவு சர்ச்சைக்குரியதாக இருக்கக்கூடாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

இன்று மேலவையில் பதிமூன்றாவது மலேசிய திட்டத்தை தாக்கல் செய்த அன்வார், மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், சபா மற்றும் சரவாக்கின் பூர்வீக மக்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட ஒவ்வொரு தரப்பினரும் தங்களின் தேவைகளுக்கு ஏற்ப சலுகைகளைப் பெறுவதை உறுதி செய்வதில் மடாணி அரசாங்கம் எப்போதும் உறுதியாக உள்ளது என்று கூறினார்.

இந்த மாதிரியான சர்ச்சைகள் எனக்குப் பிடிக்கவில்லை, ஏனென்றால் அது மலாய்க்காரர்கள் திருப்தியடைந்து விட்டார்கள் என்ற தோற்றத்தை அளிக்கிறது.

இந்தியர்கள் அல்லது சீனர்களும் அப்படித்தான்.
எனவே, ஒரு தரப்பு அதிக சலுகைகளைப் பெற்றால் சண்டையிடாதீர்கள். அது இனத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல, தேவையை அடிப்படையாகக் கொண்டது. இந்திய மக்களின் நலனுக்காக நீங்கள் கேட்க விரும்பினால், தொடருங்கள். இந்த நாட்டில் மலாய்க்காரர்கள் பெரும்பான்மையினர். ஏழைகளில் பெரும்பாலோரும் மலாய்க்காரர்கள்தான். அதனால்தான் நாம் ஆதரவளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

உதாரணமாக, ரஹ்மா ரொக்க உதவித் தொகை (எஸ்.டி.ஆர்) மற்றும் ரஹ்மா அடிப்படை (சாரா) உதவித் தொகைகள் விநியோகிக்கப்பட்டன. இதில் பயனடைந்தவர்களில் கிட்டத்தட்ட 57 சதவீதம் பேர் மலாய்க்காரர்கள். 7.57 சதவீதம் சபா பூமிபுத்ராக்கள் மற்றும் 6.23 விழுக்காட்டினர் சரவாக் பூமிபுத்ராக்கள் என அவர் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில், இந்தியர்கள் எஸ்.டி.ஆர். மற்றும் சாரா வாயிலாக 97.2 கோடி வெள்ளி மதிப்பிலான உதவிகளையும், 250 கோடி வெள்ளி மதிப்பிலான வீட்டுக் காப்புறுதியையும் பெற்றதாகவும் அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles