

ஈப்போ, செப். 4-
இந்து பக்தியை கொண்டாடி மகிழ்ந்துவரும் நமது வருங்கால தலைமுறையை இந்து சக்தியாக மாற்றும் முயற்சியில் மலேசிய இந்துதர்ம மாமன்றம் இறங்கியுள்ளது.
இந்து சமயத்திற்கு ஏற்பட்டுவரும் சவால்களை எதிர்கொள்ளவும் சமாளிக்கவும் வழிமுறைகள் தெரிந்த புதிய தலைமுறை சக்தியை உருவாக்க வேண்டும்.
அதன் முதல் முயற்சியாக இன்று இன்று இந்த திருப்புகழ் பாராயணப் பெருவிழாவை சிம்மோர் கந்தன் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயத்தில் ஏற்று நடத்துவதாக மலேசிய இந்துதர்ம மாமன்ற பேரா மாநிலத் தலைவரும் தேசிய உதவித் தலைவருமாகிய கிருஷ்ணன் சுப்பிரணியம் கூறினார்.
பாராயணம் என்பது மனோபலத்தை கொடுக்கும்.
அருணகிரிநாதர் அருளிய முத்தைத் தரும் எனும் முதல் பாடல் மாணவர்களுக்கு நாப்பிறழ் பயிற்சியைக் கொடுக்கவல்ல அற்புதப் பாடல். அதன் சந்தங்கள் பாடுவோர் மனத்தில் சக்தி ஆற்றலை உருவாக்கும். தெளிவான உச்சரிப்பு, நல்ல பேச்சாற்றல், மனோதைரியம் ஆகியவற்றை தரவல்லது.
பாடுவதற்கு சிரமம் இருந்தாலும் பாடிபாடிப் பழகிவிட்டால் அற்புதப் பலனைக் கொடுக்கும். இது மாணவர்களை சக்திமிக்கவர்களாக மாற்றும் சூட்சுமங்களைக் கொண்டுள்ள பாடல்கள் என்பதால் இதனை தேர்ந்தெடுத்து பாராயணப் பெருவிழாவாக நடத்துகிறோம் என்று அதன் நோக்கத்தை தெளிவுபடுத்தினார்.
நேற்று பேரா முழுதும் 250 மாணவர்கள் இப்பாராயணப் பெருவிழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
சித்தியவான், பந்தாய் ரெமிஸ், தைப்பிங், சுங்கை சிப்புட் ஆகிய ஊர்களில் வாரந்தோறும் இந்துதர்ம வகுப்பில் பயின்றுவரும் மாணவர்கள் இவர்கள்.
அவர்களுக்கு சமய வகுப்பை நடத்திவரும் 50 சமய ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

