

கோலாலம்பூர் செப் 10-
மலேசிய சிலம்ப கழகத்தின் ஏற்பாட்டில் வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை கெடா லூனாஸ் கருமாரியம்மன் ஆலய மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் தேசிய சிலம்பம் போட்டி நடைபெறுகிறது என்று மலேசிய சிலம்ப கழகத்தின் தேசிய தலைவர் டாக்டர் சுரேஸ் தெரிவித்தார்.
ம இகா தேசிய விளையாட்டு பிரிவு தலைவர் அண்ட்ரூ டேவிட் தலைமையிலான ம இகா விளையாட்டு பிரிவு மற்றும் இளைஞர் அணி ஆதரவோடு இந்த போட்டி மாபெரும் அளவில் நடத்தப்படுகிறது.
ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சிறப்பு வருகை தந்து போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்க இணக்கம் தெரிவித்துள்ளார்.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் 10 மாநிலங்களில் இருந்து 12 சிலம்ப குழு விளையாட்டாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
30 தங்கம் 30 வெள்ளி மற்றும் 60 வெண்கலப் பதக்கத்தை வெல்ல 300 க்கும் மேற்பட்ட விளையாட்டாளர்கள் போட்டியில் களம் இறங்குவார்கள்.
தேசிய சிலம்பம் போட்டி வெற்றி பெற முழு ஆதரவு வழங்கிய ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், இளைஞர் அணி தலைவர் அர்விந்த் மற்றும் விளையாட்டு பிரிவு தலைவர் அண்ட்ரூ டேவிட் உட்பட அனைத்து தரப்பினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் சொன்னார்.
இந்த போட்டியில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் செல்லும் மாநில குழுவுக்கு டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கிண்ணம் பரிசாக வழங்கப்படும்.
தேசிய சிலம்பம் போட்டியில் சாம்பியன் குழுவுக்கு டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கிண்ணம் வழங்கப்படுவது இது முதல் முறையாகும்.
அடுத்த ஆண்டு சிலாங்கூர் மாநிலத்தில் நடைபெறும் சுக்மா போட்டியை முன்னிட்டு இந்த தேசிய சிலம்பம் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
பல போராட்டங்கள் சவால்கள் மத்தியில் சுக்மா போட்டியில் சிலம்பம் மீண்டும் இடம் பெற்றுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது என்றார் அவர்.
சிலாங்கூர் சுக்மா போட்டியில் சிலம்பம் மீண்டும் இடம் பெற குரல் கொடுத்த அனைத்து தரப்பினருக்கும் அவர் நன்றியை தெரிவித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.