தீபாவளி ஜோம் ஷோப்பிங் – 44 லட்சத்து  30 ஆயிரம் வெள்ளி செலவில்  22,150 பற்றுச் சீட்டுகள் விநியோகம் – பாப்பாராய்டு

ஷா ஆலம், செப். 10 – எதிர்வரும் அக்டோபர் மாதம் 20ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும்  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜோம் ஷோப்பிங் இலவச பற்றுச் சீட்டுத் திட்டத்தை மாநில அரசு இவ்வாண்டும் அமல்படுத்தியுள்ளது.

பெருநாள் மகிழ்ச்சியில் வசதி குறைந்தவர்களும் விடுபடக்கூடாது எனும் உயரிய நோக்கில் அமல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கு மாநில அரசு இவ்வாண்டு 44 லட்சத்து  30 ஆயிரம் வெள்ளியை ஒதுக்கியுள்ளதாக மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கூறினார்.

தலா 200 ரிங்கிட் மதிப்புள்ள 22,150 பற்றுச் சீட்டுகள் மாநிலத்திலுள்ள அனைத்து 56 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் விநியோகிக்கபடும். இம்மாதம் 20ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 17ஆம் தேதிக்குள் தகுதி உள்ள  விண்ணப்பதாரர்களுக்கு  அவை பகிர்ந்தளிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இந்த பற்றுச் சீட்டைப் பெற்றவர்கள் சம்பந்தப்பட்ட தொகுதியில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பேரங்காடிகளில் பெருநாளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். என அவர் சொன்னார்.

இவ்வாண்டு செந்தோசா தொகுதிக்கு மிக அதிகமாக அதாவது 700 பற்றுச் சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்றத் தொகுதிகளில் இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து 550 மற்றும் அதற்கும் குறைவான பற்றுச் சீட்டுகள் வழங்கப்படும் என பாப்பாராய்டு குறிப்பிட்டார்.

இந்த பற்றுச் சீட்டுக்கு விண்ணப்பம் செய்வோர் சிலாங்கூர் வாக்காளர்களாகவும் மாதம் 3,000 வெள்ளிக்கும் குறைவான குடும்ப வருமானத்தைக கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும். புதிய விண்ணப்பதாரர்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.

மூத்த குடிமக்கள் உதவித் திட்டம் (எஸ் எம்.யு.இ.) மாற்றுத் திறனாளிகள் உதவித் திட்டம் மற்றும் (எஸ்.எம்.ஐ.எஸ்.) திட்டத்தின் இலவச பற்றுச் சீட்டு பெறுவோர் மற்றும் பிங்காஸ் பங்கேற்பாளர்கள்  தீபாவளி பற்றுச் சீட்டுத் திட்டத்தில் பங்குபெற முடியாது.

விண்ணப்பதாரர்கள் மற்றும் அவர்களின் துணைவியரின் மைகார்ட் நகல், வாக்காளர் சான்று நகல் மற்றும் சம்பள அறிக்கையை உடன் கொண்டு வர வேண்டும். விண்ணப்பாரங்களை தொகுதி சேவை மையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

கடந்தாண்டு  தீபாவளியின் போது   44 லட்சம் வெள்ளி செலவில் தலா 200 வெள்ளி மதிப்பிலான 22,000 பற்றுச் சீட்டுகளை மாநில அரசு 56 தொகுதிகளுக்கு பகிர்ந்தளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

baucar deepavali

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles