விருந்து நிகழ்வில் மதுபானம் பரிமாறப்பட்ட விவகாரம் – தவற்றை ஒப்புக் கொண்டது சுற்றுலா அமைச்சு

ஷா ஆலம், அக். 10 – அண்மையில் நடைபெற்ற விருந்து நிகழ்வில் மதுபானம் பரிமாறப்பட்டது தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சு அதற்கு பொறுப்பேற்று தனது தவறுகளை ஒப்புக்கொண்டது.

குளோபல் டிராவல் மீட் 2025 காலா  இரவு விருந்து நிகழ்வு தனியார் தரப்பினரால் கடைசி நேரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது என்று சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் விளக்கினார்.

நான்  தவறு செய்துவிட்டேன். ஏனென்றால் அங்குள்ள சின்னங்கள்  (மண்டபத்தில்) டூரிசம்  மலேசியா கீழுள்ள அனைத்து தொழில்துறையினரையும்  காட்டுகிறது.  அந்த இரவு விருந்து  நிகழ்வு அதிகாரப்பூர்வமானது அல்ல. அது ஒரு ‘தனியார்’ நிகழ்வு. (எனவே) சுற்றறிக்கை விதிகள் இதற்கு பொருந்தாது. குறைந்தபட்ச மதுபானம் பற்றிய பிரச்சனை எழுந்திருக்கக்கூடாது என அவர் சொன்னார்.

இருப்பினும், ஏதேனும் குழப்பம் அல்லது தவறான புரிதல் அல்லது சிரமங்களை ஏற்பட்டிருந்தால் அமைச்சும்  நானும் முழுப் பொறுப்போடு வருந்துகிறோம் என்று அவர் மக்களவையில் கூறினார்.

அமைச்சினால்  ஏற்பாடு செய்யப்படும் அதிகாரப்பூர்வ அரசு விழாக்களில் மதுபானம் பரிமாறுவதைத் தடைசெய்யும் வழிகாட்டுதல்கள் குறித்து டுங்குன் தொகுதி பெரிக்கத்தான் நேஷனல்  உறுப்பினர் வான் ஹசான் முகமட் ரம்லி எழுப்பிய  வாய்மொழி கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு  பதிலளித்தார்.

பிரதான மேடையின் பின்புறம் உள்ள திரையில் டூரிசம் மலேசியா சின்னத்திற்கு பதிலாக தனியார் ஏற்பாட்டாளரின் சின்னம்  இடம் பெற்றிருக்க வேண்டும் என்பதையும் கிங் சிங் ஒப்புக்கொண்டார்.

இதன் தொடர்பில் இனவாதத் தன்மை கொண்ட அறிக்கைகளை இனி வெளியிடவோ பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தவோ அல்லது இந்தப் பிரச்சனையை அரசியல் விவாதத்திற்குள் இழுக்கவோ வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டார். 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles