
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் அக் 13-
மடானி அரசாங்கத்தின் சார்பில் காசோ ஹவானா திட்டத்தின் கீழ் இன்று மேலும் மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் உட்பட 16 பேருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
பெர்னாமா அலுவலக மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்ற விழாவில் கலந்து சிறப்பித்த தகவல் தொடர்பு துறை துணை அமைச்சர் தியோ நிக் சிங் 16 பேருக்கு நிதியுதவி எடுத்து வழங்கினார்.
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தை சேர்ந்த 13 உறுப்பினர்களுக்கு தலா 3,000 வெள்ளி வழங்கப்பட்டது.

இது தவிர இதர ஊடகங்கள் சார்பில் மேலும் 3 பேருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
கடந்த ஓராண்டுக்கு முன்னர் காசோ ஹவானா திட்டத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
நலிவுற்ற மற்றும் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் ஊடகவியலாளர்களுக்கு உதவும் வகையில் காசோ ஹவானா திட்டத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்தின் கீழ் மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தை சேர்ந்த 45 உறுப்பினர்களுக்கு இந்த நிதியுதவி கிடைத்துள்ளது என்று துணை அமைச்சர் தியோ நிக் சிங் தெரிவித்தார்.
இதனிடையே மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு காசோ ஹவானா திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கி பேருதவி புரிந்து வரும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தகவல் தொடர்பு துறை அமைச்சர் டத்தோ பாமி பட்சில், துணை அமைச்சர் தியோ நிக் சிங் மற்றும் பெர்னாமா நிறுவனத்திற்கு மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இன்றைய விழாவில் பெர்னாமா தலைமை நிர்வாக இயக்குனர் டத்தோ நூருல், பெர்னாமா தலைமை ஆசிரியர் அருள் ராஜூ, மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன், மின்னல் பண்பலை தலைவர் குமரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.