
ஷா ஆலம் அக்டோபர் 23: மலேசியாவிற்கான இந்திய தூதர் பி. என். ரெட்டி, சர்வதேச ஒத்துழைப்பு மூலம் புதுமை மற்றும் திறன் வள மேம்பாட்டை முன்னெடுத்து வரும் சிலாங்கூர் மாநில அரசின் தலைமைத்து-வத்தையும் தொலைநோக்கு பார்வையையும் பாராட்டினார்.
இந்திய தொழில் நுட்ப நிறுவனம் (IIT) மதராஸ் மற்றும் சிலாங்கூர் மாநிலம் ஆதரவு வழங்கும் மலேசிய மேம்பட்ட குறைக்கடத்தி சாதன சிப் அகாடமி (Asem) ஆகியவற்றுக்கிடையிலான ஒப்பந்தப் புரிந்துணர்வு (MOU) கையொப்ப விழா, மலேசியா-இந்தியா உறவுகளில் ஒரு முக்கியமான மைல் கல்லாக அவர் விவரித்தார்.
மந்திரி புசார் டத்தோ’ ஸ்ரீ அமிருடின் ஷாரி கலந்து கொண்ட நிகழ்வில் பேசுகையில், “இந்த ஒத்துழைப்பு குறைக்கடத்தி சாதன சிப் துறையில் மலேசியா மற்றும் இந்தியா அரசுகளுக்கிடையேயான கூட்டாண்மையை மேம்படுத்தும் முக்கிய அடித்தளமாகும்.” என ரெட்டி கூறினார்.
குறைக்கடத்தி சாதன சிப் துறையில் இரு நாடுகளுக்கிடையேயான அரசு-அரசு அளவிலான ஒப்பந்தம் உருவாக்குவதற்கான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன; இது இந்த துறையின் மூலாதார முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது.” என ரெட்டி மேலும் வலியுறுத்தினார்.
சிலாங்கூர் அரசு உரையாடலைச் செயலாக மாற்ற முன்னேற்றமான அணுகுமுறையை எடுத்துள்ளது. “இன்றைய நிகழ்வு செயல் வடிவம் காணும் ஒப்பந்தத்திற்கான அடையாளம் ஆகும். இந்த முயற்சியின் மூலம், கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான நேரடி ஒத்துழைப்பையும் கூட்டு நடவடிக்கைகளின் துவக்கத்தையும் காணப்போகிறோம்,” என அவர் குறிப்பிட்டார்.

