
அண்மையில் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுதீன் 2022ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை பள்ளிகளில் 112 பாலியல் மற்றும் 687 பகடிவதை குற்றங்கள் நடந்திருப்பதாக தெரிவித்தார். இச்செய்தி மக்களிடத்தில் மலேசிய கல்வி மீது உள்ள நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது. மேலும்
பெற்றோரியல் முறை நம் நாட்டில் மிக தாழ்ந்து வருவதாக பலர் கூறுகின்றனர்.
ஒரு குழந்தையின் சமுதாய ஒழுக்க சிந்தனை முதலில் தான் வாழும் வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது. நாம் எதை விதைக்கிறோமோ அதைதான் அறுவடை செய்கிறோம்.
குழந்தைகள் முன்பு சண்டை போடுவது, தகாத வார்த்தைகளை பயன்படுத்துவது, புகைபிடித்தல், மது அருந்ததுல் , குழந்தைகளுடன் நேரம் செலவிடாமல் இருப்பது , குழந்தைகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை கேட்காமல் இருப்பது, சிறுவயதிலேயே கைபேசி பயன்பாடு உள்ளிட்ட செயல்கள் குழந்தைகளின் சிந்தனையை பாதிக்கிறது. இத்தகைய சூழலில் வாழும் குழந்தைகள் வளர வளர இளம் பருவத்திலேயே பல்வேறு தீய பழக்கங்களுக்கு ஆளாகின்றனர்.
யூ.பி.எஸ்.ஆர், பி.எம்.ஆர் பொதுத் தேர்வுகளை அரசாங்கம் நடத்தப்படாததும் ஒரு காரணம் என பேசப்படுகிறது. தேர்வுகள் இல்லாத ஒரு மாணவரின் கல்வி செயல்திறனை எப்படி மதிப்பிடுவது என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. தேர்வுகள் மாணவர்களை நம்பிக்கையுடனும் ஒழுக்கத்துடனும் இருக்கச் செய்கின்றன. பள்ளி பாடத்தின் மீது கவனம், தேர்வுக்கான நேரம் ஒதுக்குதல் மற்றும் தேர்வுக்கான மீள்பார்வை போன்ற செயல்கள் ஒரு விதமான ஒழுக்க முறையை மாணவர்களுக்கு கடைபிடிக்க செய்கின்றது.
யூ.பி.எஸ்.ஆர், பி.எம்.ஆர் பொதுத் தேர்வுகளை ரத்து செய்ததால் மாணவர்களுக்கு கல்வியின் மீது நம்பிக்கையும் கவனமும் குறைந்து கொண்டே இருக்கிறது. அதனால் மாணவர்கள் கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மற்றும் நேரத்தை வேறொரு பயனற்ற வழிகளில் பயன்படுத்துகின்றனர் . இதனால்
மலேசிய கல்வி முறை தோல்வி கண்டுள்ளதா என்ற கருத்தும் பெற்றோர்களிடம் பரவலாக பேசப்படுகிறது.
பள்ளியில் நடக்கும் வன்முறை குற்றங்கள் மிக சாதாரணமான நிகழ்வு என்று கடந்து போக முடியாது. இது ஒரு ஜனநாயக நாட்டின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, ஒரு நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
ஒழுக்கமுள்ள இளையதலைமுறையை உருவாக்குவதில் பெற்றோர் , அரசாங்கம் மற்றும் சமூகம் என அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.
கணேசன்
உரிமை அரசியல் இயக்கம்

