
உலகத் தமிழர்களின் மாபெரும் விழாவாக கொண்டாடும் தைப்பொங்கல் விழா தமிழர்களின் திருநாள் மற்றும் மலேசியர்களின் ஒற்றுமை விழாவாக திகழ வேண்டும் என்று சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஆர் ரமணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
சிலாங்கூர் இந்திய சமூகத் தலைவர்கள் (KKI) நடேசன் வரதன் (புக்கிட் அந்தாராபங்சா சட்டமன்றம்), பாலகிருஷ்ணன் பத்துமலை (லெம்பா ஜெயா சட்டமன்றம்) ஏற்பாட்டில் அம்பாங் டேவான் அமாட் ரசாலி மண்டபத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு தலைமையேற்றபோடத்தோ ரமணன் செய்தியாளரிடம் இதனைத் தெரிவித்தார்.
வானம் கொடுத்தது; பூமி பெற்றது என்ற அன்பான உறவை, நிலத்தின் மீது நின்று வான்நோக்கி கரம் குவித்து உதயசூரியனை வணங்குவதன் மூலமாக, தங்களின் உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தங்களோடு சேர்த்து உழைத்த கால் நடைகளுக்கும், தங்களின் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் நன்னாளாக பொங்கல் திருநாள் திகழ்கிறது.
உழவே தலை என வாழ்ந்த உழைப்புச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நாம். மண்ணையே குணத்தால் பிரித்து நிலத்தைப் போற்றிய மக்கள் நம் முன்னோர்கள். மனிதம் மட்டுமல்ல, மற்ற உயிரினத்தையும் தன்னோடு இணைத்து வாழ்ந்த சமூகம் நம்முடையது.
இனம், மண், மக்கள், விளைச்சல் – உணவு – மற்ற உயிரினங்கள் – இவை அனைத்துக்கும் சேர்த்துக் கொண்டாடும் ஒற்றை விழாதான் பொங்கல் திருவிழா!
இத்தகு சிறப்பு வாய்ந்த தைத்திருநாளில் தமிழர்கள் இதயங்களில் என்றும் இன்பம் பொங்கட்டும்.
செங்கரும்பைப் போல மக்கள் வாழ்வு தித்திக்கட்டும் என்று டத்தோ ரமணன் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

