Toastmaster கிளப்பில் சங்கமம் என்ற பெயரில் நான்கு அமைப்புக்கள் 3ஆவது முறையாக பிரிக்பீல்ட்ஸில் இணைக்கின்றன!

கோலாலம்பூர் நவ 10-
சொல்லதிகார அமைப்புகள் ஒன்றுசேர்ந்து சங்கமம் என்ற பெயரில் தொடர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வருகின்றன.

ஒவ்வொரு குரலுக்கும் வலிமையுண்டு என்பதன் அடிப்படையில் தமிழ் சொல்வேந்தர்களைக்(Toastmasters) கொண்ட நான்கு அமைப்புகள் ஒன்று சேர்ந்து இவ்வாண்டு தொடக்கத்தில் இருந்து இரண்டு முறை ஒன்றுகூடி இருக்கின்றன.

சங்கமம் என்ற பெயரில் இவ்வாறு ஒன்று கூடிய ‘அன்பு’, ‘மகாகவி’, ‘லவங்கம்’, ‘திரிசூலம்’ என்னும் நான்கு கிளப்புகளும் ‘சங்கமம் 3.0’ என்னும் பெயரில் மூன்றாவது முறையாக கோலாலம்பூர் பிரிக்ஃபீல்ட்ஸ்-இல் மீண்டும் ஒன்று கூடுகின்றன.

தமிழில் வாக்காற்றல்மிக்கோரை மேலும் உற்சாகப்படுத்தி பன்னாட்டு அளவில் பன்மொழி டோஸ்ட்மாஸ்டர்ஸ் மத்தியில் தமிழ்ச் சொல்வேந்தர்களையும் மிளிரச் செய்வதே இந்த சங்கமம் நிகழ்ச்சியின் முதன்மை நோக்கம் என்று இந்த சங்கமம் நீகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் துங்கு அப்துல் ரகுமான் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியருமான முனைவர் சரஸ்வதி துரைராஜ் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சிக்கான அறிமுக விழா ரவாங் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 5 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 50 மாணவர்களுக்கு இளையோர் ஆளுமை திறன் பயிற்சி கடந்த நவம்பர் 08, 09 தேதிகளில் நாள் ரவாங் அச்சிவர்ஸ் நிலையத்தில் நடைபெற்றது.

குவாங் தமிழ்ப் பள்ளி, சுங்கை சோ தமிழ்ப் பள்ளி, ரவாங் தமிழ்ப் பள்ளி, பத்து ஆராங் தமிழ்ப் பள்ளி, புக்கிட் பெருந்தோங் தமிழ்ப் பள்ளி ஆகிய பள்ளிகளிலிருந்து இந்தப் பயிற்சியில் பங்கேற்றனர்.

இந்த 50 மாணவர்களுக்கு பயனுள்ள பயிற்சியை வழங்குவதற்காக அந்தந்தப் பள்ளியின் ஆசிரியர்கள், தலைமையாசிரியர், பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தினரும் துணை நின்றதாகக் முனைவர் து.சரஸ்வதி கூறினார்.

உரையாடுவதிலும் மேடைப் பேச்சிலும் தறம் மிக்கவர்கள், தங்களின் எதிர்கால வாழ்வை வளமாக்கும் வல்லமைப் பெற்றவர்களாக விளங்குவர் என்பது திண்ணமாதலால், பேச்சுக் கலையில் ஆர்வமும் நாட்டமும் கொண்ட மாணவர்களை இளம் வயதிலேயே அடையாளம் கண்டு அவர்களையும் தமிழ் டோஸ்ட்மாஸ்டர்ஸ் கிளப்புகளில் இணைந்து இயங்க வைப்பதும் தமிழ் மொழியுடன் கூடுதலாக தேசிய மொழியான மலாய், உலக மொழியான ஆங்கிலம் அல்லது சகோதர மொழியான மெண்டரின் ஆகியவற்றில் ஏதாவதொன்றில் பேச்சாற்றல் பெற வைப்பதும் தங்களின் உள்ளார்ந்த நோக்கம் என்றும் அதன் அடிப்படையிலேயே தமிழ்ப்பள்ளி மாணவர்களும் தங்களின் சங்கமம்-03 நிகழ்ச்சியில் ஓர் அங்கமாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர் என்றும் சரஸ்வதி தெரிவித்தார்.

முன்னதாகத் தொழில்முனைவரும் தன்னூக்கப் பயிற்றுநருமான டத்தோ டாக்டர் சமனன் ரத்தினம், சிவஞானி நாகப்பன், கஜமுகன் ஜெயானந்தன், அ.நா.இராமு ஆகிய சொல்வேந்தர்களும் சங்கமும் 3.0 குறித்து ஆக்கப்பூர்வமான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

முதலில் வட்டார அளவில் தேர்ச்சிபெறும் சொல்வேந்தர்கள் அடுத்தடுத்து மாவட்டம், மாநிலம், தேசிய அளவிலான போட்டிகளில் எல்லாம் பங்குபெறுவார்கள் என்றும் இடையிடையே அவர்களுக்கான அனுபவப் பயிற்சியும் பட்டறையும் நடத்தப்பட்டு அவற்றின்மூலம் சம்பந்தப்பட்ட சொல்வேந்தர்கள் அடையும் அடைவுநிலை குறித்து மதிப்பாய்வு செய்யப் படும் அதேவேளை, பாராட்ட வேண்டிய இடத்தில் அவர்கள் பாராட்டப்பட்டு உற்சாகப்படுத்தப்படுவர்; அத்துடன் குறைகளும் நளினமாகச் சுட்டிக்காட்டப்படும்.

இப்படியெல்லாம் செப்பம் பெற்று உலக அளவில் இரண்டாவது இடத்தில் வென்றவர்களும் நம்மிடையே உள்ளனர்.

இன்று உலக நாடுகளை ஆளும் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், எதிரணித் தலைவர்கள் உட்பட அனைவரும் பேச்சுக் கலையில் திறந்தவர்கள் என்றால் அதில் மிகையில்லை;

மலேசியாவை இப்பொழுது ஆளுகின்ற பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமே, பேச்சுக் கலையில் தேர்ந்த ஒரு ‘ToastMaster’ என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய கல்லூரிக் கல்விக் காலத்தில் இருந்தே அவர் ஒரு சிறந்த பேச்சாளர் என்பதை நாடறியும்.

மலேசியா முழுவதும் தமிழ் சொல்வேந்தர்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தமிழ் மொழிக்கான பேச்சுக்கலை ஆற்றலை வலுப்படுத்தவும் தமிழ் உரைஞர்களை தன்னம்பிக்கையுடன் அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தவும் எண்ணம் கொண்டுள்ள இந்த சங்கமம் 3.0 நிகழ்ச்சி, 23.11.2025 ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர், பிரிக்ஃபீல்ட்ஸ், 72-1 துன் சம்பந்தன் சாலை, மராஸ் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது என்று இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் மாஸ்டர் அழகன் தெரிவித்தார்.

இந்த மாபெரும் நிகச்சியை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைக்க மஇகா தேசிய தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கலந்து கொள்கிறார்.

தமிழ் மொழியில் திறன்பட பேசும் தலைவர் என்றால் இன்று டத்தோஸ்ரீ சரவணன் ஒருவரே. அவரின் தமிழ் பற்றுக்கும் ஆற்றலுக்கும் நாம் அங்கிகாரம் கொடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் அவரை அழைத்திருப்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles