பேரா மாநில அரசு ஏற்பாட்டில் மாண்புமிகு சிவநேசன் தலைமையில் திருமுருகன் மாநாடு!!

ஈப்போ, நவ 15-

பேரா மாநில அரசின் ஏற்பாட்டில் மாண்புமிகு டத்தோ அ.சிவநேசன் தலைமையில் முதன்முறையாக திருமுருகன் மாநாடு ஈப்போவில் நடைபெறவுள்ளது.

மலேசிய வரலாற்றிலேயே மாநில அரசு ஏற்று நடத்தும் முதல் திருமுருகன் மாநாடு என்னும் சிறப்பை இம்மாநாடு பெறுவதாக மாநில சுகாதாரம்,மனிதவளம்,ஒருமைபாடு மற்றும் இந்தியர் நல்வாழ்வுதுறை ஆட்சிக்குழு உறுப்பினருமான டத்தோ சிவநேசன் தெரிவித்தார்.

தமிழ் கடவுள் முருகனுக்கு பேரா மாநிலத்தில் மட்டுமின்றி இந்நாடெங்கும் அவன் புகழ் மணக்கச் செய்யும் பெரும் சமய மாநாடாக இது அமையும் என்று சமய சிந்தனைவாதியுமான சிவநேசன் சுட்டிக்காண்பித்தார்.

“முருகனும் வாழ்வியலும்” என்னும் கருப்பொருளோடு ஈப்போவில் வருகின்ற 16.11.2025 (ஞாயிற்றுக்கிழமை) ஸ்ரீ சிவ சுப்பிரமணிய ஆலயம் கம்போங் கபாயாங்கில் காலை 7.00மணி முதல் மதியம் 1.00 மணி வரை சிறப்பாக நடைபெறவிருப்பதாகவும் சிவநேசன் மேலும் கூறினார்.

இச்சிறப்பு மிகு மாநாட்டில் முனைவர் மு.சங்கர் ஆய்வுக் கட்டுரை படைக்கவிருக்கும் நிலையில் சங்கரத்னா தர்மபூஷன் சிவ ஸ்ரீ அ.ப.முத்துகுமார சிவசரியார் மற்றும் விவேகரத்னா சொல்லின் செல்வர் சிவ ஸ்ரீ நா.தினேஸ்வர்மன் குருக்கள் ஆகியோர் சொற்பொழிவும் ஆற்றுவர்.

மொழியும் சமயமும் நம் இரு கண்கள் என்பதை தொடர்ந்து பறைச்சாற்றும் அமையவிருக்கும் இம்மாநாட்டில் முருகனின் புகழ்பாடுவதோடு சமய சிந்தனையை மேலோங்க செய்யவும் ஆக்கப்பூர்வ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார் சிவநேசன்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles