

ஈப்போ,ஜூன்25: பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் பேரா மாநிலத்தில் எழுத்துலகில் சிறப்பாக இயங்கி வரும் எழுத்தாளர்களை அடையாளம் கண்டு வழங்கி வரும் தமிழ்க்குயிலார் மற்றும் பூவன்னா விருது இம்முறை இரு இளம் எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டது.
கடந்த 2022ஆம் ஆண்டு முதல் இவ்விருதுகள் வழங்கப்பட்டு வேளையில் இவ்வாண்டு தமிழ்க்குயிலார் விருது தைப்பிங்கை சேர்ந்த எழுத்தாளர் ஜீவித்தா பாலக்கிருஸ்ணனுக்கு வழங்கப்பட்டது.இவர் தீவிர தேடலோடு எழுத்துலகில் பயணித்து வருகிறார்.
அதுபோல், தன் வாழ்நாள் முழுவதும் துன் சம்பந்தன் புகழ்பாடி மறைந்த அமரர் பூ.அருணாசலம் நினைவாக வழங்கப்படும் “பூவன்னா” விருது இம்முறை நாட்டில் நன்கு அறிமுகமான உத்தான் மெலிந்தாங்கை சார்ந்த எழுத்தாளர் சிவகுமார் ஆறுமுகம் என்னும் சுவாசிப்பவனுக்கு பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் வழங்கி பெருமை சேர்த்தது.
அதுமட்டுமின்றி,அண்மையில் நல்லார்கினியன் விருது பெற்ற ஈப்போ பாவலர் முத்துப்பாண்டியனுக்கு பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கி கௌரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே வேளையில், கடந்தாண்டு ஜூன் மாதம் சங்கத்திற்கு பொறுப்பேற்ற பின்னர் சிவாலெனின் தலைமையில் நடைபெற்ற முதல் ஆண்டுக்கூட்டமாக இது திகழ்ந்த வேளையில் மூவருக்கு விருது வழங்கியதோடு மட்டுமின்றி சங்கத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் பெரும் பங்காற்றிய சங்கத்தின் மூத்த எழுத்தாளர்கள் மற்றும் மேனாள் பொறுப்பாளர்களுக்கும் இக்கூட்டத்தில் சிறப்பு செய்யப்பட்டு அவர்களுக்கு பெருமை சேர்க்கப்பட்டது.
மேலும்,பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் முன்னெடுக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கும் ஆதரவு நல்கி ஒத்துழைப்பும் பங்களிப்பும் செய்யும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது அமைப்பின் தலைவர்களுக்கும் சங்கத்தின் 51வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் சிறப்பிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புந்தோங் குங்மங்கி ஆலய மண்டபத்தில் நடைபெற்ற பொது கூட்டத்தினை பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ.சிவநேசனின் சிறப்பு அதிகாரி தொடக்கி வைத்து பேசினார்.அவர் தனதுரையில் பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் அண்மையக் காலமாய் சிறப்பாக இயங்கி வருவதாகவும் பல்வேறு ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருவதாகவும் அறியப்படும் நிலையில் சங்கம் தொடர்ந்து சிறந்த நிலையில் செயல்படுவதற்காகவே டத்தோ அ.சிவநேசன் அரசு மானியமாக வெ.30 ஆயிரம் வழங்கியதாகவும் கூறினார்.
சிறப்பாக செயல்படும் இயக்கங்களுக்கு அரசு மானியம் வழங்க டத்தோ சிவநேசன் தயாராகவே இருப்பதாகவும் இயக்கங்கள் வெறுமனே மானியத்தை பெருவதில் மட்டுமே இலக்காக இல்லாமல் பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தைப் போல் சங்கத்தின் நோக்கத்திற்கு ஒப்ப ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் எனவும் நினைவுறுத்தினார்.
சங்கத்தின் ஆண்டுக்கூட்டத்திற்கு தலைமையேற்ற சிவாலெனின் சங்கத்தின் மேனாள் பொறுப்பாளர்களுக்கும் புரவலர்களுக்கும் ஆலோசகர்களுக்கும் நன்றியை பதிவு செய்ததோடு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ.சிவநேசனுக்கும் தனது நன்றியினை பதிவு செய்தார்.அதே வேளையில்,சங்கத்தின் செயலவை உறுப்பினர்களைப் பாராட்டிய சிவாலெனின் சங்கத்தின் ஒவ்வொரு நகர்விற்கும் முன்னெடுப்பிற்கும் சங்கத்தின் செயலவை உறுப்பினர்களின் பங்களிப்பும் ஒத்துழைப்பும் தனித்துவமானது என்றார்.
கடந்த ஓராண்டில் பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் பல்வேறு செயல்பாடுகளை மிகச் சிறப்பாக செய்துள்ளது.அவ்வகையில்,நூல் வெளியீடுகள்,கவிதை பயிலரங்கம்,கோமு கவிதை போட்டி,ஹைக்கூ பயிலரங்கம்,ஆசிறியர்களுக்கான சிறுகதை பயிலரங்கம்,நூல் கலந்துரையாடல்கள்,கவிதை பருகலாம் வாருங்கள் என தொடரும் அச்செயல்பாடுகள் பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தீவிர இலக்கிய நகர்வின் சான்றாக அமைந்துள்ளது என்றும் சிவாலெனின் தனதுரையில் குறிப்பிட்டார்.
சுமார் 60க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட ஆன்டுக்கூட்டத்தில் சங்கத்தின் புரவலர் வழக்கறிஞர் மதியழகன் சங்கத்தின் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டினார்.சங்க உறுப்பினர்களும் சங்கத்தின் செயல்பாடுகளை வரவேற்றதோடு மட்டுமின்றி தொடர்ந்து சிறப்பாக செயல்பட ஆலோசனைகளும் திட்டங்களையும் முன் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

