



கோப்பெங், நவ.30: இங்குள்ள 3 1/2 மைல் கோத்தா பாருவில் அமைந்துள்ள இந்திய கிராமத்திற்கு அமரர் சி. ஜெகநாதன் பெயர் சூட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும்.
இவ்விவகாரம் தொடர்பாக கம்பார் மாவட்ட நிலவள இலாகா இயக்குநருடன் கலந்தாலோசித்து நல்ல முடிவு காணப்படும் என்று பேராக் இந்திய சமூக நல , ஒற்றுமை, மனிதவளம், சுகாதாரம் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ.சிவநேசன் இக்கிராமத்திற்கு வருகை மேற்கொண்ட போது கூறினார்.
இக்கிராமம் இதுவரை முறையான பெயரை கொண்டிருக்கவில்லை. அதனை முன்னிட்டு இக்கிராமத்தை உருவாக்க இரு நல்லுள்ளங்கள் கடுமையாகவும், சிறப்பாகவும் சேவையாற்றியுள்ளனர்.
அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் பொருட்டு மறைந்த நம் சகோதரர் ஜெகநாதன் சிம்மாதிரி பெயரை சூட்ட முடிவு எடுக்கப்பட்டதாக இங்குள்ள 16 இந்திய குடும்பத்திற்கு வீட்டுமனை நில உத்திரவாத கடிதம் வழங்கியபோது குறிப்பிட்டார்.
அதுமட்டுமின்றி, பேராக் மாநிலத்தில் அரசாங்க நிலத்தில் பல ஆண்டுகளாக குடியேறிய மக்களுக்கு கட்டம் கட்டமாக நிலப்பட்டா வழங்கப்பட்டு வருகிறது.
அந்த அடிப்படையில் இங்குள்ள மக்களுக்கு நில உத்திரவாத கடிதம் வழங்கப்பட்டு வருகிறது. தனியார் நிலத்தில் அல்லது தோட்டம துண்டாடல் வாயிலாக நிலம், வீட்டுமனை கிடைக்கப் பெற்றவர்கள் வழக்கறிஞர்கள் உதவியை நாடி அந்த நிலங்களை பெற்றுக்கொள்ளலாம் என்று அவர் அறிவுறுத்தினார்.
இந்த கிராமத்தில் அருள்மிகு திரெளபதி அம்மன் ஆலய திருப்பணி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ஆலய திருப்பணிக்கு பேராக் மாநில அரசாங்கம் அடுத்தாண்டு நிதியுதவி வழங்கும் என்று அவர் சொன்னார்.
இங்குள்ள கிராமத்து மண்டபம் கட்டி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இது ஒரு மக்கள் சந்திப்பு மையமாக திகழ்கிறது. இந்த மண்டபத்திற்கு குளிர்சாதன வசதிகள் பொருத்த நிதியுதவியும் செய்யப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
இந்த கிராமத்தை ஒட்டுயே உள்ள 72 ஏக்கர் நிலத்தில் வீட்டுமனையும், குறைந்த விலையில் வீடுகளும் கட்டுத்தர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
அதனை முன்னிட்டு முதல் கட்டமாக இன்று 16 குடும்பத்துற்கு நில உத்திரவாத கடிதம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மற்றவர்களுக்கும் இந்த நில உத்திரவாத கடிதங்கள் வழங்கப்படும் என்று இக்கிராமத்தை உருவாக்கியவரும், இக்கிராமத்து தலைவரும், கேத்தா பாரு ம இ கா கிளைத்தலைவருமான சி.சுப்பிரமணியம் கூறினார்
இவ்வேளையில் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ.சிவநேசன், பேராக் மந்திரி பெசார் மற்றும் பேராக் மாநில அரசாங்கத்திற்கு தங்கள் கிராமத்தின் சார்பாக சி.சுப்பிரமணியம் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

