
கோலாலம்பூர், டிச 5- மலாக்காவில் சுட்டுக் கொள்ளப்பட்ட மூன்று இந்திய இளைஞர்கள் வழக்கு தொடர்பாக இலக்கவியல் அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான கோபிந்த் சிங் டியோ நேற்று கருத்துரைத்தார்.
இது தொடர்பாக, நாட்டில் குற்றவியல் சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற அசம்பாவிதங்கள் காவல் துறையினரால் ஏற்பட்டாலோ அல்லது போலிஸ் காவலில் இருக்கும் போது ஏற்பட்டாலோஅதனை விசாரிக்க குற்றவியல் சட்டத்தில் இடமுண்டு என அமைச்சர் கோபிந் சிங் டியோ குறிப்பிட்டார்.
இந்தச் சட்டத்தில் பல பிரிவுகள் உள்ளன.
போலீஸ் காவலில் ஒரு மரணம் ஏற்பட்டால், கட்டாயமாக விசாரணை (inquiry) நடத்தப்பட வேண்டும் என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் மட்டும் அல்லாது, சன்வேயில், போலிஸ் காவலில் இருந்த நபரின் மரணம் குறித்து விசாரிக்கவும் சட்டத்தில் இடமுண்டு என அமைச்சர் தெளிவு படுத்தினார்.
இருந்த போதும், கடந்த 9 மாதங்களாக இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கிற காரணத்தை அறிவது அவசியம் என அமைச்சர் தெரிவித்தார்.
இது தொடர்பாக நாட்டின் தலைமை நீதிபதி, இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாததன் காரணம் தொடர்பாக விளக்கம் அளிப்பது அவசியம் என அவர் கூறினார்.
மலாக்காவில் மூவர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பில், காவல் துறையில் அவர்களது குடும்பத்தினர் முறையாக புகார் அளித்துள்ளனர்.
அதற்கான அறிக்கையும் தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், புக்கிட் அமானில் சிறப்பு புலன் விசாரணை குழுவும் உடனடியாக அமைக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும், புலன் விசாரணை நடவடிக்கை விரைவாகவும், துல்லியமாகவும் செயல்படுத்தப்படுவதையும், முறையாகச் சட்டம் பின்பற்றப்படாமல், தவறு நடந்திருக்குமாயின், போலீசார் மீது சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவதையும் உறுதி செய்வோம் என கோபிந்த் சிங் டியோ நம்பிக்கை தெரிவித்தார்.

