
ஈப்போ, டிசம்பர் 17-
மலேசிய கல்வி அமைச்சின் பயிற்சி மேலாண்மை அமைப்பை (SPLKPM) முறையை ரத்து செய்யும் முடிவை மக்கள் முன்னேற்றக் கட்சி (பிபிபி) ஆதரிக்கிறது.
அதே நேரத்தில், கற்றலின் தொடர்ச்சியும் மாணவர்களின் கல்வித் தரமும் பாதிக்கப்படாத வகையில், ஆசிரியர்களின் செயல்திறனை மதிப்பிடுவதற்கான முழுமையான, வெளிப்படையான மற்றும் செயல்திறன் கொண்ட முறையை கல்வி அமைச்சு அறிமுகப்படுத்த வேண்டும் என பிபிபி கட்சியின்வ்தலைவர் டத்தோ டாக்டர் லோகாபாலா மோகன் வலியுறுத்தினார்.
வகுப்பறை கற்பித்தல், பாடத் தயாரிப்பு மற்றும் SPLKPM கீழ் உள்ள விரிவான பயிற்சி பதிவுகளை பராமரிப்பது ஆகியவற்றை ஒரே நேரத்தில் சமாளிக்க வேண்டிய நீண்டகால சிக்கலை ஆசிரியர்கள் எதிர்கொண்டு வருவதை கட்சி நன்கு அறிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
“பல ஆசிரியர்கள், பதிவுகளை நிறைவு செய்வதற்காக பள்ளிக்குப் பிந்தைய நேரங்களையும், வார இறுதிகளையும் தியாகம் செய்து வருகின்றனர். இதனால் அவர்கள் தங்கள் குடும்பத்தினருடனும், குழந்தைகள் மற்றும் வாழ்க்கைத் துணையுடனும் செலவிட வேண்டிய மதிப்புமிக்க நேரத்தை இழந்து வருகின்றனர்.
இந்தக் குறை நீண்ட காலமாகவே ஆசிரியர் சமுதாயத்தில் நிலவி வருகிறது என்று அவர் கூறினார்.
கல்வி அமைச்சின் அறிவிப்பு நாடு முழுவதும் உள்ள பல ஆசிரியர்களுக்கு நிம்மதியையும் நிவாரணத்தையும் அளித்துள்ளதாக டத்தோ லோகாபாலா குறிப்பிட்டார்.
“SPLKPM அடிப்படையில் ஒரு மோசமான முறை அல்ல. ஆனால் அதன் நடைமுறைப்படுத்துதல், கற்பித்தல் மற்றும் மாணவர் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டிய ஆசிரியர்கள்மீது, பதிவுகள் மற்றும் விதிமுறை பின்பற்றல் தொடர்பான அதிகமான நிர்வாகச் சுமையை ஏற்படுத்தியுள்ளது,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த முடிவை ஆதரித்தாலும், கல்வி தரம் , செயல்திறன் தொடர்ந்து குறைந்து வருவது தொடர்பாக உண்மையான கவலைகள் இருப்பதால், கல்வி அமைச்சு மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
மதிப்பீட்டு முறையை சீர்திருத்த இதுவே சரியான நேரம். செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் முன்னேற்றத்துடன், ஆசிரியர்கள்மீது தேவையற்ற நிர்வாகச் சுமையை ஏற்றாமல், அவர்களின் செயல்திறனை மதிப்பிட்டு கல்வித் தரநிலைகளை உயர்த்த பல புதுமையான மற்றும் பயனுள்ள வழிகள் உள்ளன என்று அவர் கூறினார்.

