நன்னெறி பாடத்தில் சனாதனம், செனட்டர் லிங்கேசுவரனின் பரிந்துரை கண்டிக்கத்தக்கது – மலேசிய தமிழ்ச்சமயப் பேரவை

கடந்த மக்களவையில் 2025 பகடிவதை தடுப்பு சட்டம் மசோதா மீதான விவாதத்தில் பேசிய போது நன்னெறி பாடத்தில் சனாதன தர்மத்தின் மதிப்பீட்டை சேர்க்க வேண்டும் என செனட்டர் லிங்கேசுவரன் அருணாச்சலம் அவர்களின் பரிந்துரை கண்டிக்கத்தக்கது என மலேசிய தமிழ்ச்சமயப் பேரவையின் துணைத் தலைவர் திரு அருள்மொழி ஆனந்த தமிழன் முனியாண்டி தெரிவித்தார்.

உண்மையில் சனாதனம் தர்மம் என்னும் கோட்பாட்டை தமிழால் தமிழர்களால் உருவாக்கப்படவில்லை. அது அயலார் வழி இடையில் திட்டமிட்டு நம்மிடையே புகுத்தப்பட்டது.

சனாதன தர்மத்தால் ஏற்படும் சமூக சீர்கேடுகள் :

1.சனாதன தர்மத்தின் வர்ண முறை கோட்பாடு

சனாதனம் கோட்பாடு பிறப்பின் (வர்ண முறை ) அடிப்படையில் பேதத்தை கற்பிக்கும் நால்வர்ண கோட்பாடு. சாதிக் கட்டமைப்பை நிலைநிறுத்தி, பாகுபாடுகள் விதைத்து ஏற்றத்தாழ்வை உருவாக்குகிறது.

2.சனாதன தர்மத்தில் கல்வி பாகுபாடு

வர்ண தர்மத்தின் அடிப்படையில் சமூகப் பிரிவினையால் கல்வி அணுகலில் பாகுபாடுகள் உள்ளன.
சில குழுவினருக்கு மட்டுமே கல்வி உரிமை மறுக்கப்பட்டதாகவும், குறிப்பாகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டதாகவும் உள்ளன.

சனாதன தர்மத்தின் வர்ண முறைப்படி, ஒவ்வொரு பிரிவினருக்கும் (வர்ணத்திற்கும்) குறிப்பிட்ட கடமைகள் இருந்தன, இது கல்வியை அணுகுவதிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
வரலாற்று விமர்சனங்கள் மற்றும் வரலாற்று ரீதியாக, சனாதன தர்மத்தின் பெயரால் சில குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே கல்வி கற்றனர்.

இது அனைவருக்கும் கல்வி என்ற கொள்கைக்கு எதிரானது. சனாதன தர்மத்தின் கோட்பாடுகள் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி, சிலருக்குக் கல்வி மறுக்க பாட்டுலது.

3.சனாதன தர்மத்தின் சமூகப் பாகுபாடு

சனாதன தர்மத்தின் சமூகப் பாகுபாடு என்பது, அதன் கொள்கைகளையும் நடைமுறைகளையும் அடிப்படையாகக் கொண்டது. இது பல காலமாக சமூகத்தில் நிலவிவரும் சாதியில் உயர்வு தாழ்வு கட்டமைப்பு, வர்ணாசிரம தர்மம், பாலின ஏற்றத்தாழ்வுகள், மற்றும் சமூக அங்கீகாரம் அடிப்படையிலான பிரிவினைகளை உள்ளடக்கியது.

4.சனாதனத்தில் பெண்களுக்கு அநீதி

சனாதன தர்மம் சாத்திரங்களின்படி சூத்திரர்களுக்கும் பெண்களுக்கும் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டது. ஆண்களைவிட பெண்கள் கீழானவர்கள். ஆண்களுக்குக் கட்டுப்பட்டு வாழவேண்டியவர்கள் என்று சாத்திரங்களின் மூலம் நிலைநாட்டினர்.

சனாதன மனுநீதி என்று சூத்திரர்களுக்கும், பெண்களுக்கும் எந்த உரிமையையும் வழங்கவில்லை. வருணக் கலப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக பெண்களுக்கு எட்டு வயதிற்குள் திருமணம் செய்ய வேண்டும் என மனுநீதி கட்டளை விதிக்கிறது. இதை மீறுபவர்களுக்குத் தண்டனைகளையும் அரசர்கள் மனுநீதியின்படி வழங்கியுள்ளனர்.

கணவனை இழந்த கைம்பெண்களுக்கு மறுமண உரிமை மறுக்கப்பட்டது. கணவன் இறந்தால் அவன் உடலை எரிக்கும் தீயில் மனைவியை தள்ளி சாகடிக்கச் செய்த ‘உடன்கட்டை ஏறல்’ என்ற வழக்கம் இந்தச் சனாதன தர்மத்தில், நீண்டகாலம் இருந்தது.

ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் சட்டங்களின் மூலம் இவற்றை ஒவ்வொன்றாக தடுத்து நிறுத்தினர். அனைவருக்குமான பொதுக் கல்வி முறையை 1835இல் கொண்டு வந்தனர்.

5.சனாதன தர்மம் காலத்திற்கு பொருந்தாது

சனாதன தர்மம் காலத்திற்குப் பொருந்தாது. அதன் சில நடைமுறைகள் (சமூக ஏற்றத்தாழ்வுகள் போன்றவை) தற்கால நீதி மற்றும் சமத்துவக் கொள்கைகளுடன் முரண்படுகின்றன. நவீன சனநாயகம் சமத்துவ கொள்கைகளுக்கும் சிந்தனைகளுக்கும் முரண்பாடாகவும் பிற்போக்குத்தனமாகவும் விளைகிறது.

இப்படி எண்ணற்ற சனாதன சித்தாந்த கோட்பாட்டு தீமைகளை கேடுகளை பட்டியலிடலாம்.
இதை ஏற்காத தமிழினத்திடம் பல நயவஞ்சக சூழ்ச்சிகளை அரங்கேற்றி, தமிழினம் பின்பற்றி வந்த தமிழருக்கே உரிய தொல் சமயமான தமிழ்ச்சமய நிலைகளை படிப்படியே மறுக்கப்பட்டு மறைக்கப்பட்டு அதிவேகமாக இந்த இழி அநீதி கோட்பாட்டை தாங்கிய வைதீக சமயம் பரவியது.

இந்த அடிப்படை சமய வரலாற்றுப் புரிதலின்றி தமிழர் இறையலுக்கு ஒவ்வாத இழி சித்தாந்தத்தை தாங்கி வரும் “சனாதன தர்மத்தை” நன்னெறி பாடத்தில் சேர்க்க பரிந்துரைக்கும் செனட்டர் லிங்கேசுவரன் செயல் அறிவிலித்தனமானது என்றார்.

மாணவர்கள் ஒழுக்கத்திற்கும் மாண்புக்கும் உலகப் பொதுமறை தந்த, தமிழர் மறையாசன் அருளிய “திருக்குறளை” விட ஒரு அறநூல் வாழ்வியல் நூல் இவ்வுலகில் இருக்கிறதா.?

எனவே அயலார் வழி வந்த அபத்தமான சித்தாந்தத்தை திணிப்பதை விட, மனித புனிதரை உருவாக்கும் அறப்புனித நூலான “திருக்குறளை” பரிந்துரைப்பதே உத்தமம் என்றார்.

எனவே செனட்டர் லிங்கேசுவரன் போன்றவர்கள் பொதுவில் ஒரு செய்தியை பரிந்துரைப்பதற்கு முன் தமிழர் வரலாற்றை உள்வாங்க வேண்டும், அல்லது தமிழர் வரலாற்றை அறிந்தவர்களை உடன் வைத்துக் கொள்ள வேண்டும், முடிந்தளவு முடிந்த தமிழ் அறிஞர்களின் ஆலோசனைகளை பெற வேண்டும் எனவும் அவர் பரிந்துரைத்த சனாதன போதனையை மீட்டுக்கொள்ள வேண்டுமென மலேசிய தமிழ்ச்சமயப் பேரவையின் சார்பில் திரு.அருள்மொழி ஆனந்த தமிழன் முனியாண்டி கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles