
பெட்டாலிங் ஜெயா, ஜன 8 – வெளிநாடுகளில் பணிபுரியும் மலேசியர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதில் அரசாங்கம் இப்போது கவனம் செலுத்தி வருகிறது. அவர்களுக்கு உயர் திறன் கொண்ட வேலை வாய்ப்புகள் மற்றும் நல்ல சம்பளத்தை வழங்குவதன் மூலம் இந்த முயற்சி மேற்கொள்ளப்படும்.
இந்த நடவடிக்கை நாட்டில் உயர் மதிப்புள்ள தொழில்களை உருவாக்குவதற்கும், சர்வதேச அளவில் மலேசியாவின் போட்டித்தன்மையை அதிகரிப்பதற்கும் மேற்கொள்ளப்படும் உத்தியின் ஒரு பகுதியாகும் என மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் கூறினார்.
“இது குறைந்தபட்ச ஊதியத்தின் பிரச்சனை அல்ல, மாறாக உயர் திறன் கொண்ட வேலைகள் மற்றும் சிறப்பு பயிற்சியுடன் தொடர்புடையது ஆகும். வெளிநாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகமாக உள்ளது, அதனால், அவர்களின் சம்பளமும் அதிகம் என அவர் குறிப்பிட்டார்.
“இருப்பினும், திறமையாளர்களைப் பயிற்றுவித்து மலேசியாவிற்கு மீண்டும் கொண்டு வருவதற்கு நாங்கள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்,” என்று அவர் தேலண்ட் கார்ப்பரேஷன் மலேசியா பெர்ஹாட் (தேலண்ட் கார்ப்) தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
இதற்கிடையில், நாடு திரும்பும் பட்டதாரிகள் மற்றும் மிகவும் திறமையான தொழிலாளர்கள் உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவனங்களில் பணியமர்த்தப்படுவதற்கு முன்பு பொருத்தமான பயிற்சி பெறுவதை தனது தரப்பு உறுதி செய்கிறது என தெலண்ட்கார்ப் வாரியத் தலைவர் வோங் ஷு கி விளக்கினார்.

