




பொங்கல் என்பது உலகம் முழுவதும் நான்கு நாட்கள் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய அறுவடைத் திருவிழா. நல்ல விளைச்சலுக்காகச் சூரிய பகவான் (சூரியன்), தாய் இயற்கை மற்றும் விவசாயத்தில் துணைபுரியும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் திருவிழாவாக இது அமைந்துள்ளது. இத் திருநாள், இந்து நாட்காட்டியின்படி புனிதமான தை மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. புதிய தொடக்கம், சமூக ஒற்றுமை மற்றும் செழிப்பு ஆகியவற்றின் அடையாளமாக, இனிப்பான அரிசி உணவான ‘பொங்கல்’ சமைத்து அர்ப்பணிப்பதன் மூலம் இவ்விழா கொண்டாடப்படுகிறது. ‘தலை பொங்கல்’ என்பது புதிதாக திருமணமான மணமகளுக்கு மிக முக்கியமான ஒரு பண்பாட்டு விழாவாகும். மணமகள் தனது கணவரின் வீட்டில் முதன்முறையாகப் பொங்கலைக் கொண்டாடும் இந்நாளில், மணமகளின் குடும்பம் ‘சீர்’ எனப்படும் சிறப்புப் பரிசுகளைக் கொண்டு வந்து வழங்குவர். இவ்விழா, புதிய மருமகனை வரவேற்கும் ஒரு சின்னமாகவும், இரண்டு குடும்பங்களுக்கிடையேயான பந்தத்தை வலுப்படுத்தும் ஒரு நிகழ்ச்சியாகவும் திகழ்கிறது.
இப்பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக, பினாங்கு இந்து இயக்கம், பினாங்கு ஐய்யர் யீத்தாமில், அமைந்துள்ள ரோக்குமலை ஸ்ரீ முனீஸ்வரர் பத்ரகாளியம்மன் ஆலயத்துடன் இணைந்து, ‘சுயம்வரம்’ திருமணத் திட்டம் மூலம் இணைந்த தம்பதிகளுக்காக முதன்முறையாக ‘தலை பொங்கல்’ விழாவை ஏற்பாடு செய்தது. இந்நிகழ்ச்சி பினாங்கு ஐய்யர் யீத்தாமில் , உள்ள ரோக்குமலை ஸ்ரீ முனீஸ்வரர் பத்ரகாளியம்மன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் நான்கு தம்பதிகள் கலந்துகொண்டனர்.
அவர்கள்:
- திரு & திருமதி சுகந்த் சாரதி
- திரு & திருமதி ஜகன்,
- திரு & திருமதி லோகநாதன்
- திரு & திருமதி ஆனந்தராஜ் தம்பதிகள் ஆவர்.
மேலும், ‘சுயம்வரம்’ திட்டத்தின் மூலம் திருமணம் செய்துகொண்ட திரு & திருமதி ஆனந்தராஜ் தம்பதினர் அவ்விழாவில் 2024-ஆம் ஆண்டு பிறந்த தங்களின் மகன் குகன்ராஜை பெருமையுடன் அறிமுகப்படுத்தினர். பினாங்கு இந்து இயக்கம், இவ்விழாவில் கலந்து கொண்ட தம்பதிகளைத் தங்களது குடும்ப உறுப்பினர்களாகவே கருதுகின்றர். அழைக்கப்பட்ட அனைத்து தம்பதிகளுக்கும் ஆலயப் புரோகிதரால் முழுமையான பாரம்பரிய முறைகளுடன் ‘தலை பொங்கல்’ பூஜை மற்றும் சடங்குகள் நடத்தப்பட்டன. விழாவின் இறுதியில், தம்பதிகளுக்கு ‘சீர்’ பரிசுகள் வழங்கப்பட்டன.
பினாங்கு இந்து இயக்கமும் (PHA) பினாங்கு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயமும் இணைந்து நடத்தும் ‘ சுயம்வரம்’ ஒரு சமூக சேவை முயற்சியாகும். இதுவரை, இத்திட்டத்தின் மூலம் 10 தம்பதிகள் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளதும், மேலும் பலர் விரைவில் மகிழ்ச்சியான செய்திகளைத் தெரிவிப்போம் என்று கூறியுள்ளதும் மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி, திருமணம் செய்ய விரும்பும் மலேசிய இந்துக்களை, ‘சுயம்வரம்’ திட்டத்தில் பதிவு செய்து, தங்களுக்கான சிறந்த வாழ்க்கைத் துணையைத் தேடுமாறு பினாங்கு இந்து இயக்கம் அன்புடன் அழைக்கிறது. இத்திட்டம், வயது வந்த மலேசிய இந்துக்களுக்காக திறந்ததாகும்.
இதில்:
திருமணம் ஆகாதவர்கள் , விவாகரத்து பெற்றவர்கள் (குழந்தைகளுடன் அல்லது இல்லாமல்) விதவைகள் / விதவர்கள் (குழந்தைகளுடன் அல்லது இல்லாமல்) தனித்த பெற்றோர்கள் உடல் குறைபாடுடையவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். இது முழுமையாக இலாப நோக்கமற்ற, சமூக சேவை அடிப்படையிலான திட்டமாகும். தற்போது, 101 பெண்கள் மற்றும் 170 ஆண்கள் இத்திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். இருப்பினும், தேவைக்கேற்ப அதிகமான ஆண் தொழில்முறை நிபுணர்கள் பதிவு செய்யுமாறு பினாங்கு இந்து இயக்கம் கேட்டுக்கொள்கிறது. விண்ணப்பதாரர்களின் தனியுரிமை (Confidentiality) முழுமையாகவும் கடுமையாகவும் பாதுகாக்கப்படும்.
மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்களுக்கு, தயவுசெய்து கீழ்கண்ட நபர்களைத் தொடர்பு கொள்ளலாம்:
முனைவர் பொன்னி – 017 503 5397 ,
திரு எஸ்.கே. கணேசன் – 013 421 1193.
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
அன்புடன்,
டத்தோ பி. முருகையா
தலைவர் பினாங்கு இந்து இயக்கம் (தொலைபேசி: 016-444 9246)

