
கோலாலம்பூர், ஜன 18-
பத்து கேவ்ஸ் கோவிலில் எஸ்கலேட்டர் (Escalator) எனப்படும் மின் படிக்கட்டு அமைக்கும் பணியைப் பற்றிய சமீபத்திய பிரச்சினைகளை தீர்க்க இன்று சிறப்பு சந்திப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
மின் படிக்கட்டு கட்டப்படும் நிலத்திற்காக கோவில் தரப்பில் செய்யப்பட்ட தற்காலிக நில பயன்பாட்டு உரிமம் (TOL) விண்ணப்பம் குறித்து சிலாங்கூர் மாநில அரசு கவலை தெரிவித்தது.
அந்த விண்ணப்பம், கோவிலின் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா அவர்களின் தனிப்பட்ட பெயரில் தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
ஆனால் அது, Registrar of Societies-இல் பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் பெயரில் செய்யப்பட வேண்டியது என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.
இதன் காரணமாகவே சிலாங்கூர் மாநில அரசு இதுவரை அந்த விண்ணப்பத்தை அங்கீகரிக்கவில்லை.
பாத்து கேவ்ஸ் கோவிலின் சட்டபூர்வ நிலை, 1930ஆம் ஆண்டில் வெளியான நீதிமன்ற உத்தரவு மூலம் நிர்ணயிக்கப்பட்டது. அந்த உத்தரவு, கோவிலுக்காக ஒரு Trust (நம்பிக்கை அமைப்பு) உருவாக்கியது.
இதற்கு பதிலாக டான்ஸ்ரீ நடராஜா அவர்கள், இந்த விண்ணப்பம் அவரது தனிப்பட்ட பெயரில் அல்ல, Temple Trustee-யின் தலைவராகிய தனது அதிகாரப்பூர்வ நிலைமையில் கோவிலின் சார்பாகவே செய்யப்பட்டது என்று விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து நான் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் V. Paparaidu அவர்களுடன் கலந்துரையாடியுள்ளேன்.
சிலாங்கூர் மாநில அரசு, கோவில் தரப்பின் இந்த விண்ணப்பத்தை எப்போதும் ஆதரித்து வந்துள்ளது.
ஆனால், மற்ற அனைத்து விண்ணப்பங்களுக்கும் போல், சட்ட மற்றும் விதிமுறை பூர்த்தி அவசியம் என்பதை மாநிலம் வலியுறுத்துகிறது.
இதே நிலைப்பாட்டை, டான்ஸ்ரீ நடராஜா தலைமையிலான கோவில் குழுவும் கொண்டுள்ளது.
டான்ஸ்ரீ நடராஜா மற்றும் அவர்களின் வழக்கறிஞர்கள் மூலம், இந்த விண்ணப்பம் சட்டப்படி சரியாக செய்யப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
இந்த விவகாரம் குறித்து தற்போது நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன, அவை இந்த நிலையைத் தெளிவுபடுத்தும் நோக்கில் தொடரப்படுகின்றன.
இதனால், இனி இரு தரப்பும் இணைந்து, சட்ட மற்றும் விதிமுறை தேவைகளை பூர்த்தி செய்து, விண்ணப்பம் விரைவில் அங்கீகரிக்கப்படும் வகையில் செயல்பட ஒப்புக் கொண்டுள்ளன.
மடானி அரசு என்ற வகையில், அனைத்து வளர்ச்சிப் பணிகளும் தெளிவாகவும், சட்டபூர்வமாகவும், சமூக நலனைக் கருத்தில் கொண்டு நடைபெற வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
நாம் அனைவரும் சேர்ந்து, சமூகத்தின் நலனையும், மத நிறுவனங்களின் உரிமைகளையும் பாதுகாப்போம் .
மேலும் அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து முன்நோக்கி சென்று இவ்வாண்டு தைப்பூசத்தை சிறப்பாக கொண்டாடி மகிழ்வோம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இன்று மதியம் பத்துமலை திருத்தலத்திற்கு சிறப்பு வருகை தந்த அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அவர்கள் டான்ஸ்ரீ நடராஜாவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்பில் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு, கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

