
கோலாலம்பூர்,ஜன.21-
2026–2035 தேசியக் கல்வித் திட்டத்தின் கீழ், தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் அமல்படுத்தப்படவுள்ள கற்றல் மானியல் (மாட்ரிக்ஸ்) முறையில் தமிழ்மொழி பாடம் தொடர்ந்து இடம்பெறும் என கல்வி துணையமைச்சர் வோங் கா வோ தெரிவித்தார்.
தேசியப் பள்ளிகளில் மலாய்மொழி, ஆங்கிலம், அறிவியல், கணிதம் ஆகிய பாடங்கள் கற்றல் மானியல் முறையில் இடம்பெறும் நிலையில், தமிழ்ப்பள்ளிகளில் இவற்றுடன் சேர்த்து தாய்மொழியான தமிழ்மொழியும் இணைக்கப்படும்.
அதேபோல் சீனப்பள்ளிகளில் சீனமொழியும் உட்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
இடைநிலைப் பள்ளிகளில் ஐந்து முக்கிய பாடங்களுடன் கூடுதலாக தமிழ்மொழி மற்றும் சீனமொழிப் பாடங்களும் சேர்க்கப்படுவதால், மாணவர்கள் தமிழ்மொழியைப் பயில மாட்டார்கள் என்ற கேள்விக்கு இடமில்லை என அவர் வலியுறுத்தினார்.
மேலும், மடானி அரசு தமிழ்ப்பள்ளிகளைப் பாதுகாத்து வருவதுடன், அனைத்து பள்ளிகளுக்கும் சமநிலை மற்றும் உரிய கவனம் வழங்கி வருவதாகவும், தமிழ்ப்பள்ளி கல்வியின் தொடர்ச்சியை உறுதிசெய்ய அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.

