எத்தனைத் தலைவர் வீட்டுப்பிள்ளைகள் தமிழ்ப்பள்ளியில் கால் வைத்தனர் டத்தோ சிவநேசன் கேள்வி!

தாப்பா,ஜன21: ஒவ்வொரு ஆண்டும் புதிய கல்வி ஆண்டு தொடங்கும் போதெல்லாம் ஆடு நனைகிறது என ஓநாய்கள் அழுதது போல சில தலைவர்களும் சமூக ஆர்வலர்கள் என்னும் போர்வையில் சிலரும் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் குறித்தும்,மாணவர் எண்ணிக்கை குறைந்துள்ளது குறித்தும் கவலை தெரிவிப்பதும்,கருத்துரைப்பதும் மட்டுமின்றி ஆலோசனைகளையும் முன் வைப்பார்கள்.

ஆனால்,அவ்வாறு கவலை கொள்ளும் தலைவர்கள்,சமூக ஆர்வலர்களின் வீட்டுப்பிள்ளைகள் தங்களின் ஆரம்பக்கல்வியைத் தமிழ்ப்பள்ளியில் தொடங்கியிருக்க மாட்டார்கள் என்பதே பெரும் வேதனையானது என பேரா மாநில மனிதவளம்,சுகாதாரம்,தேசிய ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நல்வாழ்வுத்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு டத்தோ அ.சிவநேசன் நினைவுறுத்தினார்.

தன் வீட்டுப்பிள்ளைகளை மாற்றான் பள்ளிகளில் கல்வியை தொடங்கியிருக்கும் நிலையில் இவர்களேல்லாம் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் குறித்து கவலைபடுவது வேடிக்கையானது.

குறிப்பாக,அத்தகைய கருத்துகளையும் ஆலோசனைகளையும் முன் வைத்து தமிழ்ப்பள்ளிகள் மீது தங்களுக்கு பெரும் அக்கறை இருப்பதாக காட்டிக் கொள்ளும் அரசியல்வாதிகளின் வீட்டுப்பிள்ளைகள் எந்தப் பள்ளியில் கல்வியை தொடங்கினார்கள் என்னும் கேள்வியைப் பத்திரிக்கையாளர்கள் முன் வைத்தால் தான் வெட்டி கருத்து சொல்லும் அரசியல்வாதிகள் தமிழ்ப்பள்ளி விவகாரங்களில் தலையிட மாட்டார்கள் என்றார்.

தங்களின் அரசியல் விளம்பரத்திற்காகவும்,அரசியல் லாபத்திற்காகவும் தமிழ்ப்பள்ளியை ஒரு கருவியாக பயன்படுத்துகிறார்களே தவிர அவர்களுக்கெல்லாம் தமிழ்ப்பள்ளிகள் மீது துளியும் அக்கறையில்லை என்றும் தன் மூன்று பிள்ளைகளையும் தமிழ்ப்பள்ளியில் கல்வியை தொடர வைத்து இன்று நன்நிலையில் அவர்கள் உயர்ந்திருப்பதையும் சிவநேசன் சுட்டிக் காண்பித்தார்.

மேலும்,தமிழ்ப்பள்ளிகள் நலன் சார்ந்து பேசுவோர் முதலில் தன் வீட்டுப்பிள்ளைகள் எங்கே படிக்கிறார்கள் என்பதை உணர வேண்டும்.

தமிழ்ப்பள்ளிகள் மீது நம்பிக்கை வைத்த பின்னரே,அப்பள்ளிகளின் எதிர்காலம் குறித்தும் அதன் வளர்ச்சி,மேம்பாடுகள் குறித்தும் பேச முன் வரவேண்டும் எனவும் சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ சிவநேசன் நினைவுறுத்தினார்.

தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் குறைந்து வருவது என்பது இன்றைக்கு புதிதாக தோன்றிய ஒன்றல்ல.அது கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கி விட்டது.

குறிப்பாக தோட்டத் துண்டால் தொடங்கப்பட்ட போதே தமிழ்ப்பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கையும் சரிய தொடங்கிவிட்டது என்றார்.

அன்றையத் தலைவர்கள் கொஞ்சம் தூரநோக்கோடு சிந்தித்திருந்தால்,அந்தக் காலகட்டத்திலேயே தோட்டப்புறப் பள்ளிகளுக்கு இடமாற்றத்தின் வாயிலாக புத்துயிர் அளித்திருக்கலாம்.

ஆனால்,அவர்கள் அன்றைக்கு அதனைச் செய்ய தவறிவிட்டனர்.அவர்களின் அன்றைய அலட்சியமும் தூரநோக்கும் இல்லாத காரணத்தால் தான் தோட்டப்புறப்பள்ளிகள் அதன் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி நிற்பதாக அவர் மேலும் சுட்டிக்காண்பித்தார்.

அதேவேளையில், மாணவர் சரிவை எதிர்நோக்கியிருக்கும் பள்ளிகளை இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு இடமாற்றம் செய்வது பெரும்பாலான கருத்தாக இருந்தாலும் அதற்கான அடிப்படை நடவடிக்கை தொடங்கி,அதன் சூழல்,வடிமைப்பு,வரையறை மற்றும் ஆக்கப்பூர்வமான திட்டமிடல் என பல்வேறு நிலைகளில் அதனை கையாள வேண்டியுள்ளது எனவும் விவரித்தார்.

முன்னதாக தமிழ்ப்பள்ளிகள் மட்டுமின்றி சீனப்பள்ளிகள் மற்றும் மலாய் பள்ளிகளிலும் மாணவர் எண்ணிக்கை சரிவை எதிர்நோக்குவதையும் சுட்டிக்காண்பித்த அவர் குறிப்பாக புதுக்கிராமத்தை ஒட்டி அமைந்துள்ள சீனப்பள்ளிகளும் கிராமப்புற மலாய்ப்பள்ளிகளும் இச்சிக்கலை எதிர்நோக்குவதையும் சிவநேசன் சுட்டிக் காண்பித்தார்.

தாப்பா ரோடு கீர் ஜொஹாரி தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் உரையாற்றுகையில் சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான சிவநேசன் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும்,கீர் ஜொஹாரி தமிழ்ப்பள்ளி நனிச் சிறந்த முன்னெடுப்புகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் அப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கையும் நிறைவாக உள்ளதோடு இவ்வாண்டு முதலாம் ஆண்டு மாணவர் எண்ணிக்கை கூடியிருப்பதையும் அகம் மகிழ பாராட்டினார்.

கடந்தாண்டு இப்பள்ளியின் பாலர்ப்பள்ளி மேம்பாடு,சீரமைப்பு உட்பட புறப்பாட நடவடிக்கை என பல்வேறு செயல்பாடுகளுக்காக வெ.70 ஆயிரம் மாணியமாக வழங்கப்பட்டதாக கூறிய அவர் இவ்வாண்டு வெ.20 ஆயிரத்தை மானியமாக அறிவித்தார்.

அதே வேளையில்,இப்பள்ளி தொடர்ந்து சிறந்த முன்னெடுப்புகளை நோக்கி நகர வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.

முன்னதாக பள்ளியில் பொங்கல் வைத்தல்,உரி அடித்தல்,வண்ணம் தீட்டுதல்,கோலம் போடுதல் உட்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்ற நிலையில் மாண்புமிகு டத்தோ சிவநேசனின் ஆற்றல் மிகு செயல்பாட்டாலும் நடவடிக்கையாலும் இம்மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் நம்பிக்கையான இலக்கில் பயணிப்பதாக அப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு.குமரன் காந்தியப்பன் தெரிவித்தார்.

தமிழ்ப்பள்ளிகளின் மீது மாண்புமிகு அவர்களின் அக்கறையும் தூரநோக்கு பார்வையும் பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலத்தை காக்கும் அரணாக திகழ்வதாகவும் கூறிய தலைமையாசிரியர் இப்பள்ளியின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் நம்பிக்கையாக விளங்கும் சிவநேசன் அவர்களுக்கு பள்ளியின் சார்பில் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles