தர்ம மடானி திட்டத்தின் கீழ் 155 ஆலயங்களுக்கு ரி.ம.3.1 மில்லியன் நிதியுதவி: டத்தோஸ்ரீ ரமணன்

புத்ராஜெயா, ஜனவரி 27 –

மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவு (மித்ரா) மூலம் செயல்படுத்தப்படும் ‘தர்ம மடானி’ திட்டத்தின் முதற்கட்டமாக, நாடு முழுவதும் உள்ள 155 இந்துக் கோவில்களுக்கு மொத்தம் ரி.ம.3.1 மில்லியன் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என்று மனிதவள அமைச்சர் மாண்புமிகு டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள 1,000 பதிவு பெற்ற இந்துக் கோவில்களுக்கு ரி.ம.20 மில்லியன் மதிப்பில் ஒருமுறை நிதியுதவி வழங்கும் ‘தர்ம மடானி’ திட்டத்தை பிரதமர் மாண்புமிகு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் முன்னதாக அறிவித்திருந்தார்.

இத்திட்டத்தின் கீழ் தகுதியுடைய ஒவ்வொரு ஆலயமும் தலா ரி.ம.20,000 நிதியுதவியைப் பெறும். இந்து சமய நிறுவனங்களை வலுப்படுத்தும் நோக்கில், மித்ராவின் நேரடி மேற்பார்வையில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

அதன் அடிப்படையில், நாடு முழுவதிலுமிருந்து வருகை தந்த ஆலயத் தலைவர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கு, ‘தர்ம மடானி’ திட்டத்தின் முதற்கட்டத்திற்கான அங்கீகாரக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

முதற்கட்ட அமலாக்கத்தில் மொத்தம் 155 ஆலயங்களுக்கு நிதியுதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு ஆலயத்திற்கும் தலா ரி.ம.20,000 வீதம், மொத்தமாக ரி.ம.3.1 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

‘தர்ம மடானி’ திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கும் மற்றும் அங்கீகரிக்கும் நடைமுறைகள் பல்வேறு கட்டங்களாகவும், நிலை வாரியாகவும் முன்னெடுக்கப்படும் என்றும், பயனாளிகளின் விவரங்கள் அவ்வப்போது மித்ராவின் (www.mitra.gov.my) இணையதளத்தின் வாயிலாக பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும், 2026 ஜனவரி 14ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவின் அடிப்படையில், மித்ரா தற்போது பிரதமர் துறையிலிருந்து மனிதவள அமைச்சின் கீழ் அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.

மடானி அரசாங்கத்தின் மனிதவள மேம்பாட்டு இலக்குகளுக்கு இணங்க, இந்தியச் சமூகத்திற்கான திட்டமிடல், செயலாக்கம் மற்றும் கண்காணிப்பு ஆகியவை முறையான கட்டமைப்புடனும் ஒருங்கிணைந்த செயல்பாட்டுடனும், அதிக பயனளிக்கும் வகையில் முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்வதே இந்தத் துறை மாற்றத்தின் அடிப்படை நோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles