
ஷா ஆலாம், ஜன 27- சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள கோவில் அல்லது இதர சமய வழிபாட்டுத் தலங்களை “சட்டவிரோத” (Haram) இடங்கள் என்று குறிப்பிடுவதை பொதுமக்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என சிலாங்கூர் மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.
சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும், புத்த, கிறிஸ்தவ, இந்து, சீக்கிய மற்றும் தாவோயிச சமயங்களுக்கான சிறப்புக் குழுவின் (LIMAS) இணைத் தலைவருமான மாண்புமிகு பாப்பாராய்டு வீரமான் விடுத்துள்ள அறிக்கையில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
வழிபாட்டுத் தலங்கள் வெறும் கட்டிடங்கள் மட்டுமல்ல, அவை அந்தந்த சமயத்தைப் பின்பற்றுபவர்களின் உணர்வுகள், வரலாறு மற்றும் புனிதத்தோடு பின்னிப் பிணைந்தவை என்பதை அனைவரும் உணர வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
“சட்டவிரோதக் கோவில்” அல்லது “சட்டவிரோதத் தொக்கோங்” போன்ற எதிர்மறையான சொற்களைப் பயன்படுத்துவது மத உணர்வுகளைப் புண்படுத்துவதோடு, பல்லின மக்கள் வாழும் சிலாங்கூர் மாநிலத்தில் தேவையற்ற சமூகப் பதற்றத்தை உருவாக்கும் என அவர் எச்சரித்தார்.
குறிப்பாக, சமூக ஊடகங்களில் இத்தகைய பொறுப்பற்ற கருத்துக்களைப் பரப்புவது, நீண்டகாலமாகப் பேணப்பட்டு வரும் இனங்களுக்கு இடையிலான நல்லுறவைச் சீர்குலைக்கும் என்று அவர் தெரிவித்தார்.
வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகம், நில அந்தஸ்து அல்லது இடமாற்றம் தொடர்பான விவகாரங்கள் அனைத்தும் மாநில அரசு மற்றும் உள்ளாட்சி மன்றங்களின் (PBT) அதிகார வரம்பிற்கு உட்பட்டவை.
நில நிர்வாகம் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் சார்ந்த சிக்கலான வரலாற்றுப் பின்னணிகளைக் கொண்ட இத்தகைய விவகாரங்களை அரசு சட்டபூர்வமாகவும், முறையான பேச்சுவார்த்தைகள் மூலமாகவும் கையாண்டு வருவதாக அவர் தெளிவுபடுத்தினார்.
பொதுமக்கள் அதிகாரத் தரப்பின் மீது முழு நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும், மூன்றாம் தரப்பினர் இத்தகைய விவகாரங்களில் தலையிட்டு உணர்ச்சிவசப்பட்ட கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் பாப்பாராயுடு கேட்டுக்கொண்டார்.
“ருக்குன் நெகாரா” கொள்கையின் அடிப்படையில், பிற மத நம்பிக்கைகளை மதித்து நடப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். அமைதியான மற்றும் உள்ளடக்கிய சிலாங்கூர் மாநிலத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

