

கோலாலம்பூர், ஜன 29-
பார்வையற்றோர் விழிப்புணர்வு மாதத்துடன் இணைந்து, அக்டோபர் மாதத்தில் பிரைம் டைம் செய்திகளின் போது பார்வையற்றோர் செய்தி வாசிப்பாளராக இடம்பெறச் செய்வதற்கான சாத்தியக் கூறுகளை தகவல் தொடர்பு துறை அமைச்சு ஆராயும் என்று அதன் அமைச்சர் பாமி பட்சில் தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு (PWDs) நிதி கிடைக்கச் செய்வதற்கான வழிகளையும் அமைச்சு ஆராயும்.
படைப்புத் துறையில் பங்கேற்பு மற்றும் மேம்பாடு தொடர்பான அவர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பார்வையற்ற சமூகத்திடமிருந்து நேரடியாகக் கேட்க விரும்புகிறேன் என்று அவர் சொன்னார்.

அதேசமயம் மலேசிய பார்வையற்றோர் சங்கத்தின் வளர்ச்சிக்கு 30,000 வெள்ளி மானியம் வழங்குவதாக அவர் சொன்னார்.
மலேசிய பார்வையற்றோர் சங்கத்தின் அழைப்பை ஏற்று தகவல் தொடர்பு துறை அமைச்சர் பாமி பட்சில் இன்று பிரிக்பீல்ட்ஸில் உள்ள பார்வையற்றோர் சங்க கட்டிடத்திற்கு நேரடி வருகை புரிந்தார்.
முன்னதாக மலேசிய பார்வையற்றோர் சங்கத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ ஜோர்ஜ் தமது உரையில் தகவல் தொடர்பு துறை அமைச்சருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
பார்வையற்றோருக்கு பல சாதனைகள் இருந்தபோதிலும், படைப்பு மற்றும் பொழுதுபோக்குத் தொழில்களில் தடைகள் இன்னும் தடுக்கின்றன.
இந்த சவால்களில் கட்டமைக்கப்பட்ட பயிற்சிக்கான வரையறுக்கப்பட்ட அணுகல், வெளிப்பாடு தளங்களின் பற்றாக்குறை, வரையறுக்கப்பட்ட தொடக்க மூலதனம் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட கொள்கை தலையீடுகளின் பற்றாக்குறை ஆகியவை இதில் அடங்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் பார்வையற்றோர்கள் எதிர்நோக்கி இருக்கும் சவால்கள் குறித்தும் அவர் விளக்கினார்.
பின்னர் இந்த நிகழ்வில் பார்வையற்றோர்கள் முன் வைத்த பல கேள்விகளுக்கு அமைச்சர் பாமி பட்சில் விளக்கம் அளித்தார்.
மடானி அரசாங்கம் பேறு குறைந்தவர்கள் உட்பட பார்வையற்றோருக்கு பல வகைகளில் உதவிகளை வழங்கி வருவதை அமைச்சர் தமது உரையில் சுட்டிக்காட்டினார்.
மேலும் பேறு குறைந்தவர்கள் மற்றும் பார்வையற்றோருக்கு அரசாங்கம் பக்கம் பலமாக இருக்கும் என்று அவர் அறிவித்தார்.

