லட்சக்கணக்கான பக்தர்கள் அமைதியான முறையில் நேர்த்தி கடனை நிறைவேற்றியது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது! டத்தோ டாக்டர் லோகபாலா பெருமிதம்

கோலாலம்பூர், பிப் 3 – இந்திய சமுதாயம் தங்களின் கூட்டு வலிமையை உணர்ந்து, அதனை மாற்றத்திற்கும் முன்னேற்றத்திற்கும் பயன்படுத்த வேண்டும் என மக்கள் முற்போக்கு கட்சி (பிபிபி) தலைவர் டத்தோ டாக்டர் லோக பாலா மோகன் கேட்டுக் கொண்டார்.

தைப்பூசத்தின் போது பத்து மலையில் லட்சக்கணக்கான இந்தியர்கள் அமைதியாக ஒன்று கூடி தங்களின் நேர்த்திக் கடமைகளை நிறைவேற்றியது, சமுதாயத்தின் உண்மையான வலிமையை வெளிப்படுத்துகிறது என்றார்.

“அந்த நாளில் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, ஒரே நோக்கத்துடன் அனைவரும் ஒன்றாக நின்றனர்.

இதுவே நமது சமூகத்தின் உண்மையான சக்தியை காட்டுகிறது,” என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த வலிமை ஒரே குரலாக மாறினால், இந்திய சமுதாயம் அசாதாரணமான சாதனைகளை அடைய முடியும் என்றும், அதனால் சமூக மற்றும் பொருளாதார நிலை, பிள்ளைகளின் முழுமையான கல்வித் தேவைகள் மேம்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தைப்பூசம் ஒரு சமய நிகழ்வாக மட்டுமல்ல, ஒற்றுமையின் அவசியத்தையும், கூட்டு முன்னேற்றத்திற்காக ஒரே குரலாக பேச வேண்டிய தேவையையும் நினைவூட்டும் ஒரு வாய்ப்பாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இருப்பினும், அரசியல் வேறுபாடுகள் மற்றும் பல்வேறு அரசு அல்லாத அமைப்புகள் காரணமாக, இந்திய சமுதாயம் இன்னும் பிளவுபட்டுள்ளதாக அவர் கவலை தெரிவித்தார்.

“எல்லா அமைப்புகளும் ஒரே பிரச்சினைகளைப் பற்றியே பேசுகின்றன. ஆனால் நாம் இன்னும் ஒன்றிணையவில்லை. ஒரே வலிமையான குரலாக பேசினால், நமது தேவைகள் தெளிவாகவும், பலமாகவும் வெளிப்படும்,” என்று அவர் கூறினார்.

மேலும், ஆன்மீகம் நம்மை ஒன்றிணைத்தாலும், அரசியல் விருப்பங்கள் நம்மை பிளவுபடுத்திக் கொண்டிருக்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சிலாங்கூரில் உள்ள பத்து மலையில், ஈப்போவில் உள்ள கல்லுமலை மற்றும் பினாங்கில் உள்ள தண்ணீர்மலை ஆகிய இடங்களில் அமைதியான முறையில் மக்கள் ஒன்று கூடியதை காண்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தகவல்களின் படி, பத்து மலையில் சுமார் 25 லட்சம் பக்தர்கள் வருகை தந்தனர்; பினாங்கு மற்றும் ஈப்போவில் சுமார் 5 லட்சம் பேர் கூடினர். மற்ற மாநிலங்களிலும் ஆயிரக்கணக்கானோர் முருகன் கோவில்களில் கூடியதாக கூறப்படுகிறது.

“நாம் ஒன்றிணையும் போது நமது வலிமை மிகப்பெரியது. தைப்பூசம் நமக்கு ஒரு புதிய பாதையை காட்டியுள்ளது.

இப்போது அதை நடைமுறைப்படுத்துவது நமது பொறுப்பு,” என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles