
கோலாலம்பூர், ஆகஸ்ட் 7 – இந்தோனேசியாவில் மலேசியா ஏர்லைன்ஸ் விமானி ஒருவர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மலேசிய விமானம் குழுமம் (MAG) தனது அனைத்து விமானிகளுக்கும் கட்டாய போதைப்பொருள் பரிசோதனையை அறிமுகப்படுத்தியுள்ளது.
முதல்கட்டமாக மலேசியா ஏர்லைன்ஸின் 1,260 விமானிகளுக்குக் கட்டாய போதைப்பொருள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்தப் பரிசோதனை ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் நிறைவடையும் என்றும் MAG தெரிவித்துள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பரிசோதனையை மேற்கொள்ளத் தவறும் விமானிகள், நிறுவனத்தின் நடைமுறைகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளின்படி அனுமதி பெறும் வரை விமானங்களை இயக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள திடீர் போதைப்பொருள் பரிசோதனை திட்டத்துடன் இணைந்து இந்தக் கட்டாய பரிசோதனையும் அமல்படுத்தப்படுவதாகவும், பின்னர் இது குழுமத்தின் செயலில் உள்ள விமானப் பணிப்பெண்கள் மற்றும் பணியாளர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

