ஜம்ரி வினோட் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – டத்தோ டாக்டர் லோகபாலா மோகன்

கோலாலம்பூர், பிப் 6, 2026 – மக்கள் முற்போக்கு கட்சி (பிபிபி) தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா மோகன், ஜம்ரி வினோத் மீது உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையை வலியுறுத்தினார்.

அவர், ஜம்ரி வினோட்டின் நடவடிக்கைகள் நாட்டின் பாதுகாப்புக்கும், இன ஒற்றுமைக்கும், சமூக அமைதிக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக குற்றம் சாட்டினார்.

இன்று வெளியிட்ட அறிக்கையில், இன மற்றும் மத உணர்வுகளைத் தூண்டக்கூடிய பேரணியை ஏற்பாடு செய்ததில் ஜம்ரி வினோத்தின் பங்கு மிக ஆபத்தானது என்றும், இதனை இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் டத்தோ டாக்டர் லோக பாலா மோகன் தெரிவித்தார்.

“சனிக்கிழமை நடைபெறவிருந்த பேரணியைத் தடுக்க உள்துறை அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கையை PPP வரவேற்கிறது. ஆனால் எதிர்காலத்தில் ஜம்ரி வினோத்தால் இனவெறி தூண்டல்கள் மீண்டும் உருவாகாமல் இருக்க, அவர்மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

3R (இனம், மதம், அரசாட்சி) தொடர்பான உணர்வுப்பூர்வமான விஷயங்களில் ஜம்ரி வினோத் தொடர்ந்து தலையிட்டு வருவதால், அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய காலம் கடந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

“ஆயிரக்கணக்கன காவல் புகார்கள் அவர்மீது பதிவாகியுள்ள போதும், இதுவரை எந்த குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை. சட்டம் தெளிவாக இருக்க, ஏன் நடவடிக்கை இல்லை? அவர் எட்ட முடியாதவர் போலவும் பாதுகாக்கப்படுபவர் போலவும் தெரிகிறார்,” என்று அவர் கூறினார்.
பாரபட்சமின்றி, பயமின்றி மற்றும் தயக்கமின்றி நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சகத்தையும் காவல்துறையையும் அவர் வலியுறுத்தினார்.

சட்டத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை குலைக்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்படட நடவடிக்கைகள் இருக்கக் கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மலேசியா வருகை தரும் நேரத்தில் இந்த பேரணி தடுக்கப்பட்டதற்கு உள்துறை அமைச்சகத்தை அவர் பாராட்டினார். அந்த முடிவு மலேசியாவின் சர்வதேச புகழை காக்கும் நடவடிக்கை என அவர் கூறினார்.

“இந்த பேரணி நடந்திருந்தால், நாட்டின் ஒற்றுமையை கடுமையாக பாதித்து, இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவுகளுக்கும் பெரும் தடையாக இருந்திருக்கும். இத்தகைய பாரபட்ச நடவடிக்கைகள் பயம், தவறான முன்னெண்ணங்கள் மற்றும் ஆதாரமற்ற கருத்துகளை உருவாக்குகின்றன. இது முதலீட்டாளர்களை பயமுறுத்தி, நாட்டிற்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியிருக்கும்,” என்று அவர் கூறினார்.
மேலும் சமீபத்தில் வலுப்பெற்று வரும் ரிங்கிட் மதிப்பையும் இது பாதித்திருக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

இத்தகைய தீவிரவாதத் தூண்டுதல்களை “புற்றுநோய்” என வர்ணித்த டாக்டர் லோகா, அது சமூக அமைதியை அழிக்கும் முன் முழுமையாக அகற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நாட்டின் அமைதி மற்றும்

ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களுக்கு எதிராக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியான மற்றும் தீர்மானமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

“எந்த அரசியல் அல்லது தனிப்பட்ட நோக்கத்திற்காகவும் தேசிய ஒற்றுமையை தியாகம் செய்யக் கூடாது,” என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles