
புத்ராஜெயா, பிப் 8-
இந்தியாவுடன் எட்டப்பட்டுள்ள 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) மற்றும் வியூக ஒத்துழைப்பு ஆவணங்கள், ஆசியான் வட்டாரம் உட்பட உலகளாவிய அரங்கில் மலேசியாவை ஒரு முதன்மைப் பங்காளியாக நிலைநிறுத்துவதில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் தலைமைத்துவம் எவ்வளவு வலிமையானது என்பதைக் காட்டுகிறது என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அவரைப் பொறுத்தவரை, இந்தச் சாதனை என்பது வெறும் புள்ளிவிவரங்கள் சார்ந்தது மட்டுமல்ல; மாறாக, மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளில் ஒரு புதிய அத்தியாயம் மலர்ந்திருப்பதையே இது பறைசாற்றுகிறது. இது உலகளாவிய முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பன்மடங்கு அதிகரிப்பதோடு, ஆசியான் வட்டாரத்தில் மலேசியாவின் நிலையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
2025-ஆம் ஆண்டில் மலேசியா-இந்தியா இடையிலான இருதரப்பு வர்த்தகம் 79.49 பில்லியன் ரிங்கிட்டை (18.59 பில்லியன் அமெரிக்க டாலர்) எட்டியுள்ளது இந்த வெற்றிக்கு மேலும் வலுசேர்க்கிறது. இதன் மூலம், ஆசியான் நாடுகளில் இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக மலேசியா உருவெடுத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
“இத்தகைய அபரிமிதமான வளர்ச்சி, நமது பிரதமர் முன்னெடுத்துள்ள பொருளாதாரச் சீர்திருத்தங்கள், நாட்டில் நிலவும் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் உயர்தர நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் அவர் காட்டும் உறுதிப்பாட்டிற்கு கிடைத்த வெற்றியாகும்,” என்று அவர் புகழாரம் சூட்டினார்.
நாட்டின் வளர்ச்சி மற்றும் மக்கள் நலனுக்கு நேரடிப் பயன் தரும் உயர்மட்ட பொருளாதார இராஜதந்திரம் மற்றும் தரமான முதலீடுகளை மையமாகக் கொண்ட பிரதமர் அன்வாரின் தொலைநோக்குப் பார்வைக்கு இந்தச் சாதனை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும் என்று டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் மேலும் கூறினார்.
இந்தியப் பிரதமர் மேதகு நரேந்திர மோடியின் இந்த உத்தியோகபூர்வ வருகையும், இரு நாட்டுத் தலைவர்களின் முன்னிலையில் பரிமாறிக்கொள்ளப்பட்ட ஒத்துழைப்பு ஆவணங்களும், ‘மடானி’ அரசாங்கத்தின் கீழ் மலேசியாவின் ஸ்திரத்தன்மை குறித்து இந்தியா கொண்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நம்பிக்கையை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
“குறிப்பாக, மின்னணு சில்லுகள் (Semiconductor) துறையில் இரு அரசாங்கங்களுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள வியூகக் கூட்டுறவு, உலகளாவிய உயர் தொழில்நுட்பத் துறையின் மதிப்புச் சங்கிலியில் மலேசியா ஒரு தவிர்க்க முடியாத சக்தியாகத் திகழ்வதைக் காட்டுகிறது,” என்றார் அவர்.
தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை கல்வி (TVET), பெர்கேசோ (PERKESO) மற்றும் இந்தியாவின் மாநிலக் காப்பீட்டுக் கழகம் (ESIC) இடையிலான சமூகப் பாதுகாப்பு, பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் வெறும் அடையாளச் சடங்குகள் அல்ல என அவர் சுட்டிக்காட்டினார்.
இவை மனித மூலதன மேம்பாட்டிற்கும், குறிப்பாக ‘அதிக வளர்ச்சி அதிக மதிப்பு’ (High Growth High Value) கொண்ட துறைகளில் நமது இளைஞர்களுக்கு தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் நேரடி அடித்தளமாக அமையும் என்று அவர் விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
“ஒவ்வொரு முதலீடும் நாட்டின் பொருளாதாரத்திற்கு கூடுதல் மதிப்பைக் கொண்டு வர வேண்டும், உயர்தரப் பயிற்சிகளை வழங்க வேண்டும், அதன் மூலம் மலேசியர்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதே பிரதமரின் தெளிவான அணுகுமுறையாகும்,” என்றார் அவர்.
சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், மலேசியா-இந்தியா இடையிலான ‘விரிவான வியூகக் கூட்டாண்மை’ (CSP) வலுப்படுத்தப்பட்டிருப்பது, அரசாங்கத்தின் பொருளாதார மேலாண்மை மீதான ஐயப்பாடுகளைத் தகர்த்தெறிவதோடு, அனைத்துலக அரங்கில் மலேசியாவின் மதிப்பை உயர்த்தியுள்ளது என்றும் பெருமிதத்துடன் கூறினார்.
“மலேசியா இன்று ஒரு வர்த்தகப் பங்காளியாக மட்டுமல்லாமல், உலக நாடுகள் வியந்து பார்க்கும் ஒரு நம்பகமான வியூகப் பங்காளியாகவும் உருவெடுத்துள்ளது,” என்று அவர் கூறினார்.
பிரதமர் அன்வாரின் அழைப்பின் பேரில் மலேசியாவிற்கு வருகை தந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது இரண்டு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று மாலை 4.35 மணியளவில் நாடு திரும்பினார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தின் போது இந்தியப் பிரதமருக்கான உத்தியோகபூர்வ உடன்செல் அமைச்சராகக் (Menteri Pengiring) கடமையாற்றிய டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், பிரதமர் மோடியைக் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் முறைப்படி வழியனுப்பி வைத்தார்.
மலேசிய அரச மலாய் இராணுவப் படைப்பிரிவின் முதலாவது பட்டாலியனைச் சேர்ந்த 28 அதிகாரிகள் மற்றும் வீரர்கள் அடங்கிய அணிவகுப்புடன், முழுமையான அரச மரியாதையோடு இந்த வழியனுப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிலாங்கூர், டெங்கில் தமிழ்ப்பள்ளி (SJKT Dengkil) மற்றும் பந்திங் அறிவியல் இடைநிலைப்பள்ளி (SM Sains Banting) ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் 100 மாணவர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான நட்புறவைப் பறைசாற்றும் வகையில் மலேசியா மற்றும் இந்தியக் கொடிகளை அசைத்து தங்களின் மரியாதையைத் தெரிவித்தனர்.

