
கோலாலம்பூர் பிப் 10-
நாட்டில் உள்ள இந்து ஆலயங்களின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்கு உதவும் வகையில் ம இகா மற்றும் மலேசிய இந்து சங்கம் இணைந்து செயல்படும் என்று
மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.
ஆலயங்கள் மீதான ஒரு சில அண்மைய அறிவிப்புகள், ஜம்ரி வினோத் போன்ற பொறுப்பற்றவர்களின் குறைகூறல்கள் அனைத்தும் மலேசிய இந்துக்களுக்கு அச்சுறுத்தலையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருப்பதைக் கருத்தில் கொண்டு, மஇகாவும் மலேசிய இந்து சங்கமும் இணைந்து நாடு தளுவிய அளவில் ஆலயங்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளைக் களைவதற்கும், அவர்களுக்குத் துணை செய்வதற்கும் ஒருங்கிணைந்து செயல் படவிருக்கின்றன.
ஒவ்வொரு மாநில மஇகா அலுவலகமும் இதற்கான செயலகமாக செயல்படும்.
இந்து சங்கத்தோடு இணைந்து அந்தந்த மாநிலங்களில் ஏற்பட்டிருக்கின்ற ஆலயப் பிரச்சனைகள், நிலப் பிரச்சனைகள்; அதற்கு என்ன மாதிரியான தீர்மானங்களையும், ஆலோசனைகளையும் வழங்க முடியும் என்பதனை ஆலோசிக்கும்.
அதே நேரத்தில் அந்தந்த மாநில அரசிற்கு என்ன மாதிரியான வேண்டுகோளையும், தீர்வுகளையும் முன்வைக்க வேண்டும் என்று ஆராய்வதற்கும் அந்தந்த மாநிலங்களில் இணைந்து செயல்பட வேண்டும்.
இதற்கு மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனும் மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் தங்க கணேசனும் ஒருமித்த கருத்தோடு இந்த நடவடிக்கைக்கு முழு ஆதரவு தந்துள்ளார் என்று அவர் சொன்னார்.

