வழிபாட்டுத் தலங்களைக் கட்டுவதற்கான விண்ணப்பத்தை உள்ளூராட்சி மன்றங்கள் நியாயமாக, வெளிப்படையாக பரிசீலிக்க சிலாங்கூர் சுல்தான் உத்தரவு

ஷா ஆலாம், பிப் 10 – வழிபாட்டுத் தலங்களைக் கட்டுவதற்கான ஒவ்வொரு விண்ணப்பத்தையும் உள்ளூராட்சி மன்றங்கள் (PBT) நியாயமாகவும், வெளிப்படையாகவும், முறையாகவும் பரிசீலிக்க வேண்டும் என்று மாட்சிமை தங்கிய சிலாங்கூர் சுல்தான் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான விவகாரங்களைக் கையாளும்போது, நடைமுறையில் உள்ள எந்த சட்ட விதிகளும் புறக்கணிக்கப்படக்கூடாது என அரண்மனை தரப்பு விரும்புவதாக, சிலாங்கூர் சுல்தானின் தனிப்பட்ட செயலாளர் டத்தோ முகமட் முனிர் பானி கூறினார்.

“அரசாங்க மற்றும் தனியார் நிலங்களில் அனுமதியின்றி வழிபாட்டுத் தலங்கள் கட்டப்படுவதைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்,” என்று அவர் கூறினார்.

ஜனவரி 31 வரையிலான தரவுகளின்படி, சிலாங்கூரில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள இந்து ஆலயங்கள் குறித்த தகவல்கள் மாநில அரசாங்கத்தால் சுல்தான் ஷரஃபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சிலாங்கூரில் அனுமதியின்றி 687 ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் 388 அரசாங்க நிலத்திலும், மீதமுள்ள 299 தனியார் நிலங்களிலும் கட்டப்பட்டுள்ளன.

“சிலாங்கூரில் சுமார் 11.3 விழுக்காடாக உள்ள இந்து சமயத்தைப் பின்பற்றும் இந்திய சமூகத்தின் மக்கள்தொகையுடன் ஒப்பிடுகையில், அனுமதியின்றி கட்டப்பட்ட ஆலயங்களின் எண்ணிக்கை அதிகமாகும்.”

“இந்த எண்ணிக்கை, மாநில அதிகாரிகளின் அனுமதியுடன் சட்டப்பூர்வமாக கட்டப்பட்ட ஆலயங்களை உள்ளடக்கவில்லை,” என்று முகமட் முனிர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles