
கோலாலம்பூர் , பிப் 13-
மலேசியாவின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, துங்கு அப்துல் ரஹ்மான் உதவித்தொகை (BTAR) விண்ணப்பங்கள் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளது.
தேசிய ஒற்றுமை அமைச்சர் டத்தோ ஆரோன் ஆகோங் டகாங் கூறுகையில் உள்ளூர் அரசு அல்லது தனியார் பல்கலைக்கழகங்களில் பல துறைகளில் பட்டப்படிப்பை தொடர விரும்பும் அனைத்து மலேசியர்களுக்கும் வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
துங்கு அப்துல் ரஹ்மான் அவர்களின் 123ஆவது பிறந்தநாள் நினைவாக விண்ணப்பங்கள் திறக்கப்பட்டிருப்பது.
கல்வியை எதிர்காலத்திற்கான பாலமாகவும் ஒரு நாட்டின் அடித்தளமாகவும் வலியுறுத்திய அவரது நோக்கத்தின் தொடர்ச்சியை பிரதிபலிக்கிறது.
“BTAR என்பது திறமையுள்ள மற்றும் ஆதரவு தேவைப்படும் மாணவர்கள் உள்ளூர் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வியைத் தொடர உதவும் முழுமையான உதவித்தொகையாகும்.
“பின்னணி, சவால்கள், வாழ்க்கை நிலைமைகள் அல்லது விண்ணப்பதாரர்களின் கனவுகள் என்பவற்றைக் கருத்தில் கொள்ளாமல் இந்த உதவித்தொகை முழுமையான அணுகுமுறையைப் பயன்படுத்துகிறதுஎன்று தேசிய அருங்காட்சியகத்தில் நடந்த நினைவு நிகழ்வில் அவர் இதனை தெரிவித்தார் என்று Bernama செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
விண்ணப்பங்கள் Yayasan Tunku Abdul Rahman இணையதளம் www.yayasantar.org.my
மூலம் செய்யலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
முதல் பிரதமரின் நாட்டை உருவாக்கிய பாரம்பரியம் மற்றும் தத்துவம், பல இன மக்களைக் கொண்ட சமூகத்தில் ஒற்றுமையை வலுப்படுத்த தேசிய ஒற்றுமை அமைச்சகத்தின் முயற்சிகளின் மையமாகத் தொடர்ந்து இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
“பல இனங்கள் கொண்ட நாட்டில், அதிகாரப் பகிர்வு மற்றும் ஒருமித்த முடிவு எடுக்கும் முறையை துங்கு தைரியமாக அறிமுகப்படுத்தினார்.
அது காலத்துக்கு முன்பான அணுகுமுறையாக இருந்தது. நாம் மலாய், சீனர் அல்லது இந்தியர் என்று அல்லாமல் மலேசியர்களாகச் சிந்திக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
நாட்டில் சமூகப் பிளவு, கருத்து வேறுபாடுகள் மற்றும் புரிதல் இடைவெளிகள் அதிகரித்து வரும் சூழலில், நாட்டை ஒன்றிணைக்க ‘தேசிய நாடு’ என்ற கருத்தை தனது அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தும் என்றும் அவர் கூறினார்.
மிகவும் விமரிசையாக நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரிக்பீல்ட்ஸ் ரூக்குன் தெத்தாக்கா (ஏ) தலைவர் ஸ்டார் மணியம் தலைமையில் அதன் உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

