கிக் தொழில்துறை பங்குதாரர்களுடனான கலந்தாய்வு அமர்வுகளை அரசாங்கம் தீவிரப்படுத்துகிறது – அமைச்சர் ரமணன்

கோலாலம்பூர், பிப்.24-
நாட்டில் உள்ள லட்சக்கணக்கான கிக் (Gig) பணியாளர்களின் நலன், விரிவான பாதுகாப்பு மற்றும் தொழில்துறை சமநிலை ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், ‘கிக் பணியாளர் சட்டவரைவு’ (Gig Workers Act) தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தமது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வடிவமைக்கப்படும் கொள்கையின் ஒவ்வொரு விவரமும் கள யதார்த்தத்தை பிரதிபலிப்பதை உறுதி செய்ய, மனிதவள அமைச்சு பல்வேறு பங்குதாரர்களுடன் கலந்தாய்வு அமர்வுகளைத் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அவரைப் பொறுத்தமட்டில், கிக் துறை இப்போது ஒரு தற்காலிகமான துறையாக இல்லாமல், நாட்டின் பொருளாதாரத்தின் முக்கியத் தூணாகவும், பல மலேசியர்களின் வருமான ஆதாரமாகவும் உருவெடுத்துள்ளதால், இத்தகைய உள்ளடக்கிய அணுகுமுறை மிகவும் அவசியமாகும்.

“இந்தச் சட்டம் என்பது வெறும் புதிய விதிமுறை மட்டுமல்ல, இது ஒரு நிலையான மற்றும் முற்போக்கான பாதுகாப்புக் கட்டமைப்பாகும். தொழில்துறையின் வாழ்வாதாரத்தைப் பாதிக்காமல், பணியாளர்களின் நலன் உறுதி செய்யப்படுவதை நாங்கள் விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

நேற்று தலைநகரிலுள்ள ஒரு பிரபல உணவகத்தில், துணை அமைச்சர் டத்தோ கைருல் ஃபிர்டாவுஸ் அக்பர் கானுடன் இணைந்து, கிக் துறையின் முக்கிய சங்கங்கள் மற்றும் அமைப்புகளுடனான ஒரு சந்திப்பில் அமைச்சர் கலந்து கொண்டார்.

இதில் மலேசிய பி-ஹெயிலிங் பணியாளர்கள் சங்கம் (PENGHANTAR), மலேசிய பூமிபுத்ரா ஒப்பனைக் கலைஞர்கள் சங்கம், மலேசிய தேசிய சைகை மொழி மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம், மலேசிய செவித்திறன் குறைபாடுள்ளோர் நலன் – ஆலோசனை சங்கம் மற்றும் மலேசிய இ-ஹெயிலிங் கூட்டணி (GEM) ஆகியவை கலந்துகொண்டன.

இந்தச் சந்திப்பு, உணவு விநியோகஸ்தர்கள், இ-ஹெயிலிங் ஓட்டுநர்கள், தொழில்முறை ஒப்பனைக் கலைஞர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் கிக் பொருளாதாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள மாற்றுத்திறனாளி சமூகம் என நாட்டின் கிக் பொருளாதாரச் சூழலின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தியது.

இந்தக் கலந்துரையாடலின் போது, பிரதிநிதிகள் தங்களின் கருத்துக்களைத் தெரிவிக்கவும், ஆலோசனைகளை வழங்கவும், அடிமட்ட அளவில் எதிர்கொள்ளும் சிக்கல்களை முன்வைக்கவும் அமைச்சால் முழுமையான வாய்ப்பு வழங்கப்பட்டது.

சமூகப் பாதுகாப்பு, பாதுகாப்புப் பங்களிப்புகள், சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வழிமுறைகள், நியாயமான வருமானக் கட்டமைப்பு மற்றும் கூட்டுப் பொறுப்பை உறுதி செய்வதில் தளம் வழங்குநர்களின் பங்கு ஆகிய அம்சங்களில் விவாதங்கள் கவனம் செலுத்தின.

பெறப்பட்ட ஒவ்வொரு கருத்தும் ஆழமாகப் பரிசீலிக்கப்பட்டு, தளம் வழங்குநர்கள் உள்ளிட்ட பிற பங்குதாரர்களுடனான அடுத்தகட்ட கலந்தாய்வுக் கூட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் என்று டத்தோஶ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.

இந்தக் கிக் பணியாளர் சட்டம் வரும் மார்ச் மாத இறுதியில் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டாலும், தொழில்துறை சார்ந்தவர்களிடமிருந்து நேரடியாகக் கருத்துக்களைப் பெற அமைச்சு தொடர்ந்து களத்தில் இறங்கிச் செயல்படும் என்று அவர் வலியுறுத்தினார்.

“சிறந்த கொள்கைகளை மூடிய அறைக்குள் உருவாக்க முடியாது. அவை உண்மையான சூழலைப் பற்றிய ஆழமான புரிதலிலிருந்து பிறக்க வேண்டும். கிக் பணியாளர்களின் குரல்களை நேரடியாகக் கேட்பது, வரும் காலத்தில் இச்சட்டத்தை முறையாகச் செயல்படுத்துவதை உறுதி செய்ய மிக அவசியமாகும்,” என்றார் அவர்.

அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும் பெற்று, இந்தச் சட்டத்தை சுமுகமாக அமல்படுத்துவதை உறுதி செய்ய, ஒவ்வொரு கொள்கையும் முறையான ஆலோசனைகளுக்கு உட்படுத்தப்படுவதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

“எங்கள் இலக்கு தெளிவானது! ஒரு சட்டத்தை நிறைவேற்றுவது மட்டுமல்ல, கிக் பணியாளர்கள் மற்றும் தொழில்துறையின் எதிர்காலத்திற்காக ஒரு நீதியான, சமநிலையான மற்றும் மீள்திறன் கொண்ட பாதுகாப்பு அமைப்பை உருவாக்குவதே எங்களின் நோக்கம்,” என்று டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles