
ஷா ஆலம், மார்ச் 2-
சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த பி40 பிரிவைச் சார்ந்த இந்திய மாணவர்களின் உயர்கல்விச் சுமையைக் குறைக்கும் நோக்கில், 2026-ஆம் ஆண்டிற்கான கல்விக்கட்டண உதவித் திட்டத்தை மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதை பெரிதும் வரவேற்பதாக சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.
இந்த உதவித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மலேசிய இந்தியராகவும் மலேசியப் பிரஜையாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
விண்ணப்பதாரர்கள் சிலாங்கூர் மாநிலத்திலேயே பிறந்தவர்களாகவோ அல்லது குறைந்தது 10 ஆண்டுகள் இம்மாநிலத்தில் நிரந்தரமாக வசிப்பவர்களாகவோ இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் இளங்கலைப் பட்டதாரி மாணவர்கள் மற்றும் முதலாம் ஆண்டு பயிலும் டிப்ளோமா மாணவர்கள் மட்டுமே இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் மற்றும் தேவையான ஆவணங்கள் அனைத்தும் வரும் மார்ச் 13, 2026, வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்குள் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு அலுவலகத்திடம் நேடியாகச் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆகவே இளங்கலை மற்றும் டிப்ளமோ பயிலும் இந்திய மாணவர்கள் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி கல்வி நிதியுதவியை பெற்றுக கொள்ளும்படி டாக்டர் சுரேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

