சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வு பல்லின மக்களிடையே ஒற்றுமையை மேம்படுத்துகிறது – பாப்பாராய்டு

பந்திங், மார்ச் 2 – இன்று தேசிய வகை ஜெஞ்சாரோம் சீனப்பள்ளி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பந்திங் தொகுதி அளவிலான சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்விற்கு மக்களின் ஆதரவு சிறப்பாக இருந்ததாக மனிதவள மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு தெரிவித்தார்.

இந்த நிகழ்வு கடந்த சனிக்கிழமை பந்திங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று ஜெஞ்சாரோமில் நடைபெற்றது. இதில் 1,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அவர்கள் அனைவருக்கும் பல வகையான உணவுகள் வழங்கப்பட்டதோடு, பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்நிகழ்வின் மிக முக்கியமான அம்சமாக, புறப்பாட நடவடிக்கையில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு RM200 வழங்கப்பட்ட நிகழ்வு கருதப்படுவதாக அவர் மீடியா சிலாங்கூரிடம் பகிர்ந்து கொண்டார். இதுபோன்ற உதவிகள் மாணவர்கள் கல்வியிலும் புறப்பாட நடவடிக்கையிலும் சிறந்து விளங்க ஊக்குவிப்பதோடு, அவர்கள் மென்மேலும் பல வெற்றிகளைக் காணத் துணைபுரியும் என்றார்.

மேலும், இந்த திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வு வருடாந்திர நிகழ்வாகும் என பாப்பாராய்டு விளக்கினார். மலேசியாவில் வாழும் பல்லின மக்களிடையே ஒற்றுமையை மேம்படுத்தும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் இனி வரும் ஆண்டுகளிலும் தொடரப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். இதன் வழி பல இன மக்களின் பண்பாட்டைப் பேணிக் காப்பதோடு, அவற்றை பறைசாற்றவும் முடியும் என்றார்.

எனவே, இதுபோன்ற பண்பாட்டுச் சம்பந்தமான நிகழ்வுகள் அனைத்து தொகுதிகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டு மக்களின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்த வேண்டும் எனக் கூறியதோடு, அவர் தனது சீனப் புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles