
கோலாலம்பூர், மார்ச் 2 – ஊழியர் சேமநிதி வாரியத்தின் (KWSP) 2025ஆம் ஆண்டுக்கான மரபுசார் மற்றும் ஷரியா சேமிப்புகளுக்கு 6.15 விழுக்காடு ஈவுத்தொகை அறிவிக்கப்பட்டிருப்பது, அந்த ஓய்வூதிய சேமிப்பு நிதியத்தின் திறமையான முதலீட்டு நிர்வாகத்தைப் பிரதிபலிக்கிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
நிதி அமைச்சருமான அன்வார், இந்த அறிவிப்பு நாட்டின் ஓய்வூதிய சேமிப்புத் திட்டத்தின் மீது மக்கள் கொண்டுள்ள தொடர்ச்சியான நம்பிக்கையையும் காட்டுகிறது என்றார்.
“சவால்மிக்க உலகளாவிய சந்தை நிலவரங்களுக்கு மத்தியிலும், இந்த சாதனை KWSP-யின் முதலீட்டு நிர்வாகத்தின் வலிமையையும், நாட்டின் ஓய்வூதிய சேமிப்புத் திட்டத்தின் மீது மக்கள் கொண்டுள்ள தொடர்ச்சியான நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது,” என்று அன்வார் இன்று தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
மடாணி அரசாங்கம் இந்தச் செயல் திறனை வரவேற்பதாகவும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் மக்களின் நல்வாழ்வை மேம்படுத்தவும் நீடித்தக் கொள்கைகளைத் தொடர்ந்து செயல்படுத்தும் என்றும் அவர் கூறினார். இதன்மூலம், ஒவ்வொரு குடிமகனும் தங்களது எதிர்காலத்தை அதிக நம்பிக்கையுடனும் கண்ணியத்துடனும் திட்டமிட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Bernama

