
கோலாலம்பூர் – இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலங்களின் நிர்வாகத்தை வலுப்படுத்துவதில் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு உறுதியாக உள்ளது. இதற்காகச், சிறப்பு பதிவாளரை (Pendaftar Khas) நியமிக்கும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சர்
யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்தார்.
இந்த முயற்சியின் மூலம், வழிபாட்டு தலங்களின் நிர்வாகம் தொடர்பான சிக்கல்களுக்கு முறையாகத் தீர்வு காணப்படவுள்ளன.
ஆலயங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய நில விவகாரங்கள் மாநில அரசுகளின் அதிகார வரம்பிற்குள் இருப்பதாகக் குறிப்பிடும் கூட்டரசு அரசியலமைப்பிற்கு இணங்க இத்திட்டம் செயல்படுத்தப்படும் என துணையமைச்சர் இன்று மேலவையின் நிறைவு உரை அங்கத்தில் தெரிவித்தார்.
மேலும், இஸ்லாமிய அல்லாத வழிபாட்டு தலங்களின் நிர்வாகம், தேசிய மத நல்லிணக்கக் குழுவின் செயல்திட்டங்கள் குறித்து டாக்டர் லிங்கேஸ்வரன், டாக்டர் ஜுஃபித்ரி பின் ஜோஹா எழுப்பிய கேள்விகளுக்கும் துணையமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.
அவரின் கூற்றுப்படி, கூட்டரசு அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்ட மதச்சுதந்திரக் கொள்கையை அரசு முழுமையாக மதிக்கிறது. அரசியலமைப்பின் பிரிவு 3, இஸ்லாமை கூட்டரசு மதமாக அறிவித்தாலும், பிற மதங்கள் அமைதியாகவும் நெறிமுறையாகவும் கடைப்பிடிக்க அனுமதி வழங்குகிறது.
அதே நேரத்தில், வழிபாட்டுதலங்கள் நிர்வாகம், நில விவகாரங்கள், உரிமை, பதிவு மற்றும் நிலம் கையகப்படுத்தல் ஆகியவை கூட்டரசு அரசியலமைப்பின் ஒன்பதாவது விதியின் கீழ் உள்ள மாநிலப் பட்டியலின் அடிப்படையில் மாநிலங்களின் அதிகார வரம்பிற்குள் வருகின்றன என்று அவர் விளக்கினார்.
எனவே, இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலங்களுக்கான பதிவாளரை அமைக்கும் எந்தவொரு முன்மொழிவும், மேற்கண்ட அரசியலமைப்பு விதிகளைக் கருத்தில் கொண்டு, ஆலோசனை மற்றும் சமூக நல்லிணக்க அணுகுமுறையின் மூலமே செயல்படுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.
அதோடு, இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலங்களின் விவகாரங்களை ஒருங்கிணைக்க அனைத்து மாநில அரசும் சிறப்பு குழுக்களை அமைத்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, சரவாக்கில் Unit Hal Ehwal Agama-Agama Lain (UNIFOR), பினாங்கில் Jawatankuasa Penyelaras Rumah Ibadat Bukan Islam, சிலாங்கூரில் Jawatan Kuasa Khas Agama Buddha, Kristian, Hindu, Sikh மற்றும் Tao (LIMAS), பெர்லிஸில் Jawatankuasa Induk Rumah Ibadat Bukan Islam, மற்றும் கூட்டரசு பிரதேசத்தில் Jawatankuasa Eksekutif Rumah Ibadat Bukan Islam ஆகியவை செயல்படுவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்தச் சிறப்பு குழுக்கள் அனைத்தும், இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலங்களின் நிர்வாகம் தொடர்பான விவகாரங்களை மாநில அளவில் ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றன.
மத்திய அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலங்களின் நிர்வாகத்தில் வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சு (Kementerian Perumahan dan Kerajaan Tempatan (KPKT) முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் யுவேஸ்வரன் தெளிவுபடுத்தினார்.
அந்த அமைச்சின் கீழ் செயல்படும் ரிபி எனப்படும் இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலங்களுக்கான நிதி ஒருங்கிணைப்பு பிரிவு (Unit Penyelarasan Dana Rumah Ibadat Bukan Islam (RIBI) தற்போது அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் e-RIBI முறைமையின் அடிப்படையில் இந்த நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார் அவர்.
அதுமட்டுமல்லாமல், KPKT அதிகார வரம்பிற்குள் மூன்று முக்கிய சட்டங்கள் உள்ளன. ஊராட்சித் துறை சட்டம் 1976 (சட்டம் 171), சாலை, கால்வாய் மற்றும் கட்டடங்கள் சட்டம் 1974 (சட்டம் 133) , நகர மற்றும் கிராம திட்டமிடல் சட்டம் 1976 (சட்டம் 172) ஆகிய மூன்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு வழிபாட்டு தலங்களின் கட்டுமானம் மற்றும் புதுப்பிப்புகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை வழங்குகின்றன என்று அவர் கூறினார்.
தேவாலயம், பள்ளிவாசல், கோவில், ஆலயம் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களும் எந்தவொரு விதிவிலக்கும் இன்றி திட்டமிடல் அனுமதி (kebenaran merancang) பெற வேண்டியது கட்டாயம் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
இதனிடையே தேசிய மத நல்லிணக்கக் குழுவின் நடைமுறைகள் குறித்தும் துணையமைச்சர் விளக்கம் அளித்தார். இந்தக் குழு 25 மதத் தலைவர்களை உள்ளடக்கியுள்ளது.
இதில் இஸ்லாம், பௌத்தம், கிறிஸ்துவம், இந்து, தாவோ, சிக், பஹாய் மத பிரதிநிதிகள் மற்றும் சரவாக் மாநிலத்தின் UNIFOR உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதை அவர் குறிப்பிட்டார்.
மதங்களுக்கு இடையிலான புரிதலை மேம்படுத்தல், நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்குவது, சமூக விழிப்புணர்வு செயல்பாடுகளை முன்னெடுப்பது, சமய விவகாரங்கள் தொடர்பாகப் பொதுவெளியில் விவாதம் நடத்துவதை தவிர்த்து மத மற்றும் அது சார்ந்த சிக்கல்கள் குறித்து நடுநிலையானவர்களைக் கொண்டு தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்துவது, கலந்துரையாடல், ஆலோசனை மற்றும் நடுநிலையான செயல்பாடு, அணுகுமுறைகள், மத தொடர்பான உணர்ச்சிமிக்க சிக்கல்களைக் கையாள்வதற்கு தேசிய மத நல்லிணக்கக் குழு பெரிதும் துணை புரியும்.
இதன் மூலம் நாட்டில மதங்களுக்கிடையிலான நல்லிணக்கம் நிலை நிறுத்தப்படும் என சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினருமான யுனேஸ்வரன் கூறினார்.

