மேம்பாட்டால் கத்தோயோங் தமிழ்ப்பள்ளி, ஆலயங்களுக்கு பாதிப்பு இல்லை!!டத்தோ சிவநேசன் தகவல்!!

Oplus_131072

தஞ்சோங் மாலிம்,மார்ச்13: பெரும் வளர்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் முவாலிம் மாவட்டத்தில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் அதிகம் உருவாவதற்கான சாத்தியங்களைச் சுட்டிக் காண்பித்த மாநில மனித வளம்,சுகாதாரம்,தேசிய ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நல்வாழ்வுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு டத்தோ அ.சிவநேசன் அவ்வாய்ப்புகளில் இந்திய இளைஞர்கள் விடுப்பட்டு விடக்கூடாது எனவும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி கொள்வதில் இந்திய இளைஞர்கள் தீவிர முனைப்பும் காட்ட வேண்டும் எனவும் நினைவுறுத்தினார்.

ஆட்டோமொபைல் மையமாகவும் அது சார்ந்த தொழில்பேட்டையாகவும் உருவெடுத்து வரும் தஞ்சோங் மாலிம் நகரம் BYD கார் நிறுவனமும் உருவாகி வரும் நிலையில் தொழிற் திறன் கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்கும் இளையோருக்கு வேலை வாய்ப்பு முதன்மை தேர்வாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை என்றார்.

அதேவேளையில்,மேம்பாட்டில் பாதிப்பை எதிர்நோக்கலாம் என இதற்கு முன்னர் எழுந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கத்தோயோங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கும் ஆலயங்களுக்கும் நிலம் ஒதுக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக் காண்பித்த சிவநேசன் பேரா மாநிலத்தில் தமிழ்ப்பள்ளியாக இருந்தாலும் சரி,ஆலயங்களாக இருந்தாலும் சரி தனது கவனத்திற்கு கொண்டு வரப்படாமல் எந்தவொரு நடவடிக்கைகளையும் எந்தவொரு தரப்பும் மேற்கொள்ளாது என்பதையும் நினைவுறுத்தினார்.

மேலும், சுங்கையில் தொழிற்திறன் கல்வி பயிற்சி மையமும் தனது தலைமையில் செயல்படுவதையும் விவரித்த அவர் கல்வியில் பின் தங்கிய இந்திய மாணவர்களும், இளைஞர்களும் நன் முறையில் பயிற்சி பெற்று தொழில்திறன் சார்ந்த வேலைகளில் மிளிர வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.

அதுமட்டுமின்றி தாப்பா மற்றும் தஞ்சோங் மாலிம் ஊராட்சி மன்றங்களில் இருக்கும் வாய்ப்புகளை இந்திய சமுதாயம் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் கேட்டு கொண்ட அவர் அரசாங்கம் வழங்கிடும் உதவிகள் வாயிலாக ஊராட்சி மன்றங்களின் கடைகளை வாடகைக்கு எடுத்து இந்திய சமுதாயம் வியபாரத்தையும் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தஞ்சோங் மாலிம் மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர் டாக்டர் ஷாஸ்ரி இட்ஷாம் பின் வகாப் அப்துல் இரஹ்மான் மற்றும் பத்தாங் பாடாங் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவட் துவான் அஸ்மி பின் அப்துல் அசிஸ் ஆகியோரை சந்தித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் டத்தோ சிவநேசன் இவ்வாறு கூறினார்.

மேலும்,ஊராட்சி மன்றங்களில் இருக்கும் வேலை வாய்ப்புகளையும் இந்தியர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் இது குறித்தும் அவ்விரு ஊராட்சி மன்ற தலைவர்களிடம் பேசியுள்ளதாகவும் ,வேலைக்கு இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வருவதில்லை என்றும் அப்படி வந்தால் தகுதியானவர்களுக்கு வாய்ப்பு வழங்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர்கள் கூறியதையும் நினைவுக்கூர்ந்ததோடு ஊராட்சி மன்றங்களின் அகப்பக்கத்தில் வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பம் செய்யுமாறும் அவர் கேட்டு கொண்டார்.

அதுமட்டுமின்றி,தாப்பாவில் பன்றி பண்ணை விவகாரங்களுக்கும் தீர்வு காணப்பட்டிருப்பதாகவும்,அவற்றில் நான்கு பண்ணைகள் நவீனத்துவ பண்ணையாக் இயங்கிக் கொண்டிருப்பதாகவும் கூறிய அவர் பீடோர் பேருந்து நிலையத்திற்கு அருகில் சுமார் 1.8 ஏக்கர் நிலத்தில் புதிய மேம்பாட்டுத் திட்டம் குறித்தும் இச்சந்திப்பில் கலந்து பேசப்பட்டதாகவும் கூறினார்.

மேலும், பீடோரில் அமைக்கப்பட விருக்கும் நவீன மின்சுடலை பணிகள் விரைவில் தொடங்கபடவிருக்கும் நிலையில் அதற்கான பூமிபூஜை தொடர்பிலும் இச்சந்திப்பு பெரும் கவனத்தை ஈர்த்ததாக குறிப்பிட்டார்.

இதற்கிடையில், தாப்பா ஊராட்சி மன்ற புதிய கட்டிடம் தாப்பா நகரின் மையத்திலேயே அமைய ஆவணம் செய்யப்படும் என்றும் அது தாப்பா நகருக்கு வெளியில் அமையாது எனவும் விவரித்த டத்தோ சிவநேசன் இச்சந்திப்பின் போது ஜசெக ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்தும் அவர்கள் ஆற்றும் பணிகள் குறித்தும் கேட்டறியப்பட்டதாகவும் தெரிவித்தார்.

தாப்பா ஊராட்சி மன்றத்தில் ஜசெகவை பிரதிநிதித்து 3 இந்திய கவுன்சிலர்களும் தஞ்சோங் மாலிம் ஊராட்சியில் 4 இந்திய கவுன்சிலர்களும் இருக்கும் வேளையில் அவர்கள் அனைவரும் தங்களின் கடமையை சிறப்பாக ஆற்ற வேண்டும் என்றார்.

ஒவ்வொரு கவுன்சிலர்களின் செயல்பாடுகளும் மிக துள்ளியமாக கண்காணிக்கப்படுவதாகவுன் கூறிய அவர் கவுன்சிலர்கள் தங்களின் கடமையை நிறைவாக செய்யாவிட்டால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நினைவுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles