

ஜனநாயக செயல் கட்சி (DAP) தனது 60ஆம் ஆண்டு விழாவை கொண்டாடும் இந்த தருணத்தில், விடாமுயற்சி, நிலையான கொள்கை மற்றும் நாட்டிற்கு வழங்கிய சேவைகளால் வடிவமைக்கப்பட்ட நமது நெடுந்தூர பயணத்தை நினைவுகூருகிறோம்.
அறுபது வருடங்களாக, ஜ.செக-வின் இந்தப் போராட்டம் மலேசியாவின் அனைத்து மக்களுக்கும் சொந்தமானது என்ற நம்பிக்கையில் வலுபெற்று நிற்கிறது.
பல ஆண்டுகளாக முன்னெடுத்த உரிமைப் போராட்டங்கள், தியாகங்கள் மற்றும் சீர்திருத்தங்களின் வழி, ஜனநாயக அமைப்புகளை வலுப்படுத்தவும், பொறுப்புணர்வை மேம்படுத்தவும், நீதியை நிலைநாட்டவும், சரிசமமான வாய்ப்புகளை மக்கள் பெற ஊக்குவிக்கவும் ஜ.செ.க பங்களித்து வருகிறது.
நாட்டு மக்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதிலிருந்து நல்லாட்சியை முன்னிறுத்துவதுவரை, எங்கள் முயற்சிகள் நீதியை நிலைநாட்டி, வெளிப்படையான, மற்றும் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய மலேசியாவை உருவாக்க உதவியுள்ளன.
நாங்கள் நிர்வாக வெளிப்படைத்தன்மைக்காகப் பாடுபட்டோம். நிறுவனங்களின் அதிகாரப் பிரிவுகள் ஒன்றையொன்று கட்டுப்படுத்துவதையும், சமநிலைப்படுத்துவதையும் உறுதி செய்யும் நிறுவன ரீதியான சோதனைகள் மற்றும் சமநிலைகளை வலுப்படுத்தி, சாமானிய மலேசியர்களின் குரல்களும் ஜனநாயக உரிமைக் குரலாக ஒலிக்கவும் உறுதி செய்தது ஜ.செ.க.
இன்று நாம் காணும் முன்னேற்றம், வலுபெற்று வரும் அமைப்புகளும், பொது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வும், நாட்டின் மீதான நம்பிக்கையைக் கைவிட மறுத்த எண்ணற்றோரின் கூட்டுப் போராட்டத்திற்கும், விடாமுயற்சியாலும் ஒற்றுமையாலும் மாற்றம் என்பது சாத்தியம் என்ற நம்பிக்கைக்கும் சான்றாகத் திகழ்கின்றன.
இன்றைய ஒற்றுமை அரசாங்கத்தின் ஒரு அங்கமாக, இந்த நிலைப்பாடு தொடர்வதை உறுதி செய்வதில் டி.ஏ.பி உறுதியாக உள்ளது. இந்த நாட்டிற்கான எங்கள் பங்கு வெறும் பதவிகளை அலங்கரிப்பது மட்டும் அல்ல, மாறாக அனைத்து மலேசியர்களும் பயன் பெறும் வகையில் அர்த்தமுள்ள சீர்திருத்தங்களை வழங்குவதே ஆகும்.
அறுபது ஆண்டுகள் கடந்த பின்னரும், ஜனநாயகத்தை முன்னிறுத்தி, அனைத்துத் தட்டு மக்களையும் அரவணைத்து, ஒன்றுபட்ட மலேசியாவைக் கட்டமைக்கும் தெளிவான நோக்கத்தை குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
அறத்தையும் நேர்மையையும் அடிப்படையாகக் கொண்ட செழிப்பான நாட்டில், வளர்ச்சிகள் அனைவருடனும் பகிரப்பட்டு, வாய்ப்புகளும் எளிதில் கிடைக்கப்பெறும் நிலையில் பொது மக்களின் நம்பிக்கையும் தொடர்ந்து வலுப்பெறும் என்பது அவாவாகும்.
ஜ.செ.க பொதுச் செயலாளர் அந்தோனி லோக் அவர்களின் தலைமையில், நாம் ஒருமித்த அமைப்பாக முன்னேறிச் செல்கிறோம். ஒவ்வொரு உறுப்பினருக்கும், நமது அடிமட்டத் தலைவர்களுக்கும், நமக்குத் துணையாக நின்ற மக்கள் அனைவருக்கும், உங்கள் அர்ப்பணிப்பும், உங்கள் உரிமைக் குரலும், உங்கள் பங்களிப்புமே நம்மைத் தாங்கிப் பிடித்துள்ளன. இந்த மைல்கல்லை நாம் கொண்டாடும் வேளையில் இது நமது உறுதிப்பாட்டை தொடர்ந்து நிலைநிறுத்துவதாக அமையட்டும்.
ஒன்றுபட்ட, வலிமையான மற்றும் வெற்றிகரமான ஒரு மலேசியாவை நிலைநாட்டுவதே நமது உறுதியான இறுதி இலக்கு. அந்த இலக்கை நோக்கி நாம் அனைவரும் முன்னேறிச் செல்வோம்.

